FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அணைகள் நிரம்பியுள்ளதால் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால் உணவு உற்பத்தி  இந்த ஆண்டு உயர வாய்ப்புள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
எடப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில்,  புதிய பாலத்தை தொடக்கிவைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன்,  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் செ.செம்மலை,
பகிர்:

சேலம்:  தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதால் உணவு உற்பத்தி  இந்த ஆண்டு உயர வாய்ப்புள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி விரிவுபடுத்தப்பட்ட கூட்டு குடிநீர்த் திட்டம், புதிய திட்ட பணி அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில்,   சுமார் ரூ.2.40 கோடியில் 2 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், 48 புதிய பணிகளுக்கு ரூ.30.83 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டியும், 229 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியது:-
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கொடுக்க மறுத்த கர்நாடக  மாநிலத்துக்கு பாடம் புகட்டும் வண்ணமாக, இறைவன் கிருபையால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அவர்களாகவே லட்சக்கணக்கான கன அடி நீரை தமிழகத்துக்குத் திறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து அணைகள் நிரம்பியுள்ளன.  இதன் விளைவாக, தமிழகத்தில் உணவு உற்பத்தி  இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.  
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு தீவிரம்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதிய அளவு வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.  
தமிழக மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டுமென்ற வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ரூ.4466 கோடி மதிப்பில் 101.67 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் 2 மாநகராட்சிகள், 17 நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 14218 கிராம ஊராட்சிகளில் 65 குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  
குடிநீர் விநியோகத்தை  மேம்படுத்துவதற்காக பல்வேறு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம்,  நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டம் ஆகியவற்றின் மூலம் நிதி முதலீடு பெறப்பட்டு குடிநீர்த் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2011-ஆம் ஆண்டில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு சராசரியாக 93 லிட்டர் என்ற விகிதத்தில் மொத்தம் 1567.10 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. 
2017-18 ஆம் ஆண்டில் குடிநீர் விநியோகம் 1873.29 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு சராசரியாக 113 லிட்டர் வீதம் வழங்கும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆளுமையில் சிறந்தது தமிழகம்: சென்னை மாநகர் நீங்கலாக, மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு குடிநீர்த் திட்டங்கள், புதை சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்தும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது.  
தமிழகத்தில் இதுவரை 554 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 2073 மில்லியன் லிட்டர் குடிநீர் 4 கோடியே 21 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ.1853.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
பெங்களூரில் உள்ள பொது விவகாரங்கள் மையம் என்ற அமைப்பானது அண்மையில் வெளியிட்ட அறிக்கையில்,  ஆளுமையில், இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments