அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் காலமானார்
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே. ஒச்சம்மாள் (90) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
மதுரை/சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே. ஒச்சம்மாள் (90) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒச்சம்மாள், மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து வியாழக்கிழமை இறந்தார். அவரது உடல் செல்லூரில் உள்ள அமைச்சர் ராஜுவின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஒச்சம்மாளின் உடல் தத்தனேரில் மயானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தகனம் செய்யப்பட உள்ளது.
அதிமுக இரங்கல்: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தாயார் கே.ஒச்சம்மாள் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவின் தாயார் கே.ஒச்சம்மாள், வயது முதிர்வு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.