FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்: நாராயணசாமி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுச்சேரி: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சரவையில் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தீவிரவாதிகள் கையில் இருந்தும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் கோடி வங்கிக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி வாசல்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மக்கள் அவதிப்பட்டனர். மேலும், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி 168 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.15 லட்சத்து 31 ஆயிரம் கோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருந்த ரூ.500, ரூ.1,000 கோடி நோட்டுகளில் 99.3 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் 2 சதவீதம் பாதிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரூ.20,000 கோடி செலவு ஆனது. ஆனால், ரூ.10,700 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. மேலும்,  இந்த நடவடிக்கையால் ஏராளமான குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பெட்ரோலிய பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.73, பெட்ரோல் விலை ரூ.84-ஆகவும், சென்னையில் டீசல் விலை ரூ.72 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.80 ஆகவும் இருந்தது. இதுபோன்ற விலை உயர்வு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும். ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் உயரும் போது போராட்டம் நடத்திய பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
அதேபோல, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை ரூ.70.63 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த மதிப்பு ரூ.60-ஆக இருந்தது. ரூபாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்தாலும், அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயரும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியை தவறான முறையில் அமல்படுத்தியது போன்ற மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் இதற்கு முக்கியக் காரணம் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments