அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு அதி நவீன சிகிச்சை: ரூ.37 கோடியில் மருத்துவ சாதனங்கள் கொள்முதல்
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயை
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான அதிநவீன கதிரியக்க சிகிச்சை (ட்ரூ பீம் ரேடியேஷன் தெரபி) மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்காக ரூ.37 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்திலான மருத்துவக் கருவிகள் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட உள்ளன.
அடுத்த இரு மாதங்களுக்குள் அந்த சிகிச்சை மையங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் செயல்படத் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு செயல்படத் தொடங்கினால் அதன் மூலம் மாதத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க முடியும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ சாதனங்கள் அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வந்தாலும், தற்போது வரவுள்ள ட்ரூ பீம் தெரபி சாதனங்களானது உயர் தொழில்நுட்பத்திலானவையாகும். தனியார் மருத்துவமனைகளில்கூட இத்தகைய நவீன சிகிச்சை முறைகள் அரிதாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தைப் பொருத்து அவை வேறுபடுகின்றன.
அதன்படி, மூளை, நுரையீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், கதிரியக்க சிகிச்சைகளில் அதி நவீனமான ஒன்றாகக் கருதப்படும் ட்ரூ பீம் ரேடியேஷன் முறையானது பெரும்பாலான மருத்துவமனைகளில் இல்லை. அதற்கான மருத்துவ உபகரணங்களின் விலை மட்டும் சுமார் ரூ.18 கோடி என்பதால், அவற்றை வாங்க தனியார் மருத்துவமனைகளே தயக்கம் காட்டுகின்றன.
இந்தச் சூழலில், அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக இரண்டு ட்ரூ பீம் ரேடியேஷன் சாதனங்களை கொள்முதல் செய்ய சுகாதாரத் துறை முடிவு செய்தது. ரூ.37 கோடி மதிப்பீட்டிலான அந்த சாதனங்களை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த வாரத்தில் அது இறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இரு மாதங்களுக்குள் ஓமந்தூரார் மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அந்த சாதனங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதற்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் மட்டும் ரூ.6.5 கோடி செலவில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கதிரியக்கம் வெளியேறாத வகையில் 4 அடி தடிமனில் அங்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகள் சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஓமந்துரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் கூறியதாவது:
ஓமந்தூரார் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான ஒன்று. தற்போது நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு உயர் தரத்திலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது ட்ரூ பீம் ரேடியேஷன் தெரபியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலமாக புற்றுநோய் கட்டிகளை மிகத் துல்லியமாக அகற்ற முடியும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.