முகப்பு
தமிழ்நாடு

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட வேண்டும்: காவல்துறை இணை ஆணையர் அன்பு எச்சரிக்கை! 

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட வேண்டும் என்று காவல்துறை இணை ஆணையர் அன்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 31 மார்ச் 2018, 6:46 pm IST
பகிர்:

சென்னை: போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட வேண்டும் என்று காவல்துறை இணை ஆணையர் அன்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.  காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தொடர் விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர்,, தேடுதல் வேட்டை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 15 இளைஞர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட வேண்டும் என்று காவல்துறை இணை ஆணையர் அன்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெரினாவில் கைது நடவடிக்கை நடைபெற்ற பொழுது காவல்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிட வந்திருந்த கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது  

சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதுபோன்ற போராட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.