பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரம்: கைதான அதிகாரி சஸ்பெண்ட்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் குணசேகரன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் குணசேகரன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 1.33 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனிடையே அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 15 -க்கும் மேற்பட்டோரை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் குணசேகரன் என்பவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் 30 -ஆம் தேதி குணசேகரனை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன், கைது செய்யப்பட்ட கண்காணிப்பாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.