FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: கரூரில் சிக்கிய 3 பேர்

திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டில் தம்பதியரை கட்டிப்போட்டு 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கரூரில் வாகனச் சோதனையில் சிக்கினர்.

Updated On : 25 மே 2018, 2:56 am IST
பகிர்:

திருவள்ளூரில் ஆடிட்டர் வீட்டில் தம்பதியரை கட்டிப்போட்டு 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கரூரில் வாகனச் சோதனையில் சிக்கினர். அவர்களை அழைத்து வர திருவள்ளூர் காவல் துறையினர் விரைந்துள்ளனர். 
திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள ராஜாஜிபுரம் பத்மாவதி நகரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(63). ஆடிட்டரான இவர் தனது மனைவி ரஜிதாவுடன் (60) திங்கள்கிழமை (மே 21) இரவில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் கதவைத் தட்டிய மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி, தம்பதியர் இருவரையும் கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் வைத்திருந்த 150 சவரன் நகை மற்றும் இரண்டு செல்லிடப்பேசிகளையும் கொள்ளையடித்தனர். பின்னர், ஆடிட்டரின் கார் சாவியையும் பறித்து, அந்தக் காரில் தப்பிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, தந்தையின் அலறல் சப்தம் கேட்டு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் லோகேஷ் கீழே வந்து பார்த்து, நடந்தவற்றை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 
இதுகுறித்து, திருவள்ளூர் காவல் நிலையத்தில் லோகேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஏற்கெனவே, இது தொடர்பாக அந்த வீட்டில் வேலை செய்த நபர்கள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை 
மேற்கொண்டனர். 
மேலும், முகமூடி கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறை சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, வாகனச் சாவடிகளில் கொள்ளையரின் வாகனங்கள் கடந்து சென்றுள்ளனவா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். 
இந்நிலையில், திருச்சியை அடுத்த கரூர் பகுதியில் புதிய நபர்கள் சிலர் வாகனத்தில் சுற்றி வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. இதன் அடிப்படையில் கரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சொகுசு வாகனத்தை நிறுத்த முயற்சித்தபோது அந்த வாகனம் வேகமாகச் சென்றுள்ளது. உடனே, தனிப்படையினர் விரைந்து சென்று வாகனத்தைச் சுற்றிவளைத்தனர். 
தொடர்ந்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கரூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், அந்த 3 பேரையும் அழைத்து வர திருவள்ளூர் போலீஸார் கரூருக்கு 
விரைந்துள்ளனர். 
அந்த 3 பேரிடம் விசாரித்தால்தான் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் யார், யார் உள்ளனர் என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments