கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு: திமுக தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு
கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளக்கமளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்
சென்னை: கன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு தொடர்பாக திமுக வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளக்கமளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதுக்குகு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் மொத்தம் 1833. இவற்றில் 1761 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த வாக்குகள் தேர்தல் விதிமுறைகளின்படி பதிவு செய்யப்படவில்லை. தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர். அப்படி வாங்கும் தபால் வாக்குகளை அங்கேயே கையெழுத்திட்டு மடித்து வைக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று கையெழுத்திட்டு மடித்து சீல் வைத்துள்ளனர். எனவே, இந்த தபால் வாக்குகளை செல்லாத வாக்காக மாற்றவும், குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்கவும் வாய்ப்புள்ளது.தபால் வாக்குகளில் முறைகேடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் இந்த மனு தொடர்பாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி விளக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.