தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தரிசனம்
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.13) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.13) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தோ் சிதிலமடைந்ததால், தேரோட்டம் நின்றுபோனது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தோ் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. கரோனா பரவல் குறைந்துவிட்டதால், நிகழாண்டு தேரோட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும், காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோயில் திருத்தேரோட்டம்
இதில், 15 ஆம் திருநாளான புதன்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதைத்தொடர்ந்து, காலை 6.50 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. அதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் செல்கின்றன. தேருக்கு முன்னே சிவ வாக்கியங்கள் முழக்கமிடுகின்றன.
மேலும், பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன.
மேலும், தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து வழங்கி வருகின்றனர்.
இவ்விழாவையொட்டி, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.