FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் காவிரி ஆணையத் தலைவர் உருவபொம்மை எரிப்பு

Updated On : 16 பிப்ரவரி 2024, 3:37 pm IST
தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு துணை நிற்கும் மத்திய அரசையும், அதற்குத் துணையாக இருந்து சூழ்ச்சி செய்து வரும் எஸ்.கே. ஹல்தரையும், பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Advertisement

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களிடம் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது:

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேக்கேதாட்டு அணை குறித்த பொருளை முன் வைத்தால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி,காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை.

இந்தநிலையில்,ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது.

எனவே காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே. ஹல்தரை நீக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என்றார் மணியரசன்.

காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளர் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப. ஜெகதீசன், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் த.சு. கார்த்திகேயன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசியக் களத் தலைவர் ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், துரை. இரமேசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments