விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க இபிஎஸ்ஸுக்கு துணிவில்லை: முதல்வர் விமர்சனம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
மத்திய பாஜக அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கு மாறாக மத்திய பாஜக அரசு,'வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நிலையில் அதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்.
"புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான விபி ஜி ராம் ஜி திட்டத்தால் 125 நாள்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.
ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாள்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக்கூட இனி மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.
மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே தில்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?
தில்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.
வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
M.K. Stalin criticizes AIADMK General Secretary Edappadi Palaniswami on MGNREGA scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.