வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு!
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. டிச. 31 ஆம் தேதியில் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார்.
பகல்பத்து முடிந்து, வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பானது இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
Advertisement
Advertisement
திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு தனுர் லக்னத்தில் சிம்ம கதியில் புறப்பட்டார்.
தொடர்ந்து, வலதுபுற மதில்படி வழியாக இரண்டாம் பிரகாரம் எனப்படும் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக, பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயிலைக் கடந்தார் நம்பெருமாள். இதையடுத்து, மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று வழியாக, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
பரமபதவாசல் திறப்பு...: அங்கு நம்பெருமாளுக்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை வாசித்தனர். இதைத் தொடர்ந்து, பரமபதவாசலை வந்தடைந்த நம்பெருமாள், ஸ்தானீகர் கட்டியம் கூற சரியாக அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
பக்தி முழக்கத்துடன் பிரவேசம்...: அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் புடைசூழ ரங்கா... ரங்கா ... என்ற பக்தி முழக்கங்களுக்கிடையே பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள்.
அதேபோல், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதேபோல, தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் அதிகாலை திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயில்களுக்கு வருகை தந்திருந்ததால் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.