முகப்பு
தமிழ்நாடு

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிவு; ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் அனுமதி

Updated On : 28 அக்டோபர், 2025 at 10:39 AM
காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக, கவிதை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 40,000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து வினாடிக்கு 65,000 கன அடி வீதம் அதிகரித்து இருந்தது. பின்னர் நாளடைவில் இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்தது.

Advertisement

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. திங்கள்கிழமை (அக். 27) நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து,செவ்வாய்க்கிழமை (அக். 28) நிலவரப்படி 14,000 கன அடியாக குறைந்து, தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து சரிந்து, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு தடை உத்தரவை நீக்கி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.

ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை திறக்கப்பட்டுள்ள போதிலும், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிந்து வரும் நிலையில் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோந்தா!

summary

Boating allowed in Hogenakkal after 6 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.