FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை! பின்னடைவா?

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடாதது குறித்து...

Updated On : 3 ஏப்ரல் 2026, 1:14 pm IST
அண்ணாமலை - IANS
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் (மார்ச் 30) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாஜகவும் காங்கிரஸும் தொகுதிப் பட்டியலைப் பெற்றும், வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது கூட்டணி கட்சிகளிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியல் இன்று(ஏப். 3) வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசி (தனி) எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தாமதம் ஏன்?

பாஜகவில் திருப்பூர் தெற்கு, மானாமதுரை, ராமநாதபுரம், அறந்தாங்கி, ஆவடி, புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்ததும், அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சித்ததுமே பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தாமதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்பிருந்தே திட்டவட்டமாக கூறி வந்தார். அதேநேரத்தில் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது கேரளத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை கடந்த 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் இளங்கோவிடம் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அண்ணாமலைக்கு குறிப்பிட்ட ஆதரவாளர்கள் இருப்பதாலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுவதாலும் அவரை வரும் தேர்தலில் போட்டியிடவைக்க குறிப்பாக தேசிய பாஜக தலைமை கடுமையாக முயற்சித்ததாகக் கூறப்பட்டது. ஏனெனில் அண்ணாமலை போட்டியிடாதபட்சத்தில் அது பாஜகவுக்கு பின்னடைவைத் தரலாம் என்றும் கூறப்பட்டது.

இதனால் அண்ணாமலையிடம் பேசி ஒப்புதல் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியைக் கேட்டதாகவும் அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் வானதியும் அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது தற்போது பட்டியல் மூலமாக உறுதியாகியுள்ளது.

இன்று வெளியான பட்டியலில் வானதி ஸ்ரீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 2021 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு திருப்பூர் தெற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் ஒன்றை வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது திருப்பூர் தெற்கு தொகுதியில் தங்கராஜ், மொடக்குறிச்சி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகள் கிருத்திகா சிவகுமார் போட்டியிடுகிறார்கள்.

மொடக்குறிச்சி தற்போது பாஜக வசம் இருந்தாலும் 281 வாக்குகள் வித்தியாசத்திலேயே சரஸ்வதி வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக இருந்தாலும் வெற்றி பெறுவதில் சவாலான தொகுதியாகவே இருக்கிறது.

திருப்பூர் வடக்கு தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. கடந்த இரு முறை தேர்தல்களிலும் கே.என். விஜயகுமார் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே, சென்னையில் பிரதமர் மோடி நடத்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையின் அரசியல் பயணம்...

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020 ஆகஸ்டில் பாஜகவில் இணைந்த நிலையில் சில வாரங்களிலேயே அவர் பாஜகவின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 ஜூலை மாதமே பாஜக மாநிலத் தலைவரானார். 2025 ஏப்ரல் மாதம் வரை தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் பயணத்தை மேற்கொண்டார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் நல்ல வாக்குகளைப் பெற்றது.

எனினும் 2025 ஏப்ரல் மாதம் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைப்பதற்கு அண்ணாமலை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால், புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகே பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. (தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது)

பின்னர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் அவருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தற்போது தேர்தலில் போட்டியிட தேசிய தலைமை வலியுறுத்தியும் அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது அவரது ஆதரவாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாதது அண்ணாமலைக்கு கட்சியில் பின்னடைவை ஏற்படுத்துமா? அல்லது இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தொண்டனாக தன்னுடைய கட்சிப் பணியைத் தொடர்வேன் என்றும் வேட்பாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அவர்களது வெற்றிக்கு பிரசாரம் செய்வேன் என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக வேட்பாளர்கள்

ஆவடி - ராஜசிம்ம மகிந்திரா, மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தரராஜன், தளி - டாக்டர் நாகேஷ் குமார், திருவண்ணாமலை - சி. ஏழுமலை, ராசிபுரம் (தனி) - டாக்டர் எஸ்டி பிரேம்குமார், மொடக்குறிச்சி - கிருத்திகா சிவக்குமார், உதகை - போஜ ராஜன், அவினாசி (தனி) - எல். முருகன், திருப்பூர் தெற்கு - தங்கராஜ், கோவை வடக்கு - வானதி சீனிவாசன், திருவாரூர் - கோவி சந்துர், தஞ்சை - எம். முருகானந்தம். கந்தர்வக்கோட்டை - உதயகுமார், புதுக்கோட்டை - ராமச்சந்திரன், அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர் - கே.சி. திருமாறன், மானாமதுரை - பால கணபதி, மதுரை தெற்கு - ராம சீனிவாசன், சாத்தூர் - நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் - கே. நாகேந்திரன், திருச்செந்தூர் - கேஆர்எம் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் ஐயாசாமி, ராதாபுரம் - பாலகிருஷ்ணன், நாகர்கோயில் - எம்.ஆர். காந்தி, கொளச்சல் - டி. சிவக்குமார், பத்மநாபபுரம் - பி. ரமேஷ், விளவங்கோடு - எஸ். விஜயதாரணி.

summary

Annamalai didnt contest in TN assembly election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments