முகப்பு
தமிழ்நாடு

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக அறிவிக்கப்பட்டது பற்றி...

Updated On : 5 ஜூன் 2026, 10:47 am IST
கே. அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்தார். ஜூலை 2021-ல் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வரவேற்பை பெற்றிருந்தார்.

Advertisement

Advertisement

ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த நிலையில், 2025-ல் மாநிலத் தலைவர் பதவியிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டார்.

கட்சித் தலைவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், தில்லிக்கு பயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை சந்தித்து, ராஜிநாமா கடிதத்தை வழங்கியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணம், கட்சியின் தான் ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையாக நிதின் நவீனிடம் சமர்ப்பித்ததாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகுவது குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து, அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்ட நிலையில், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது.

இதனிடையே, புதிய இயக்கம் தொடர்பாக தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் இன்று பகல் 12 மணியளவில் பேசவுள்ளதாக அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் ராஜிநாமா கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Annamalai quits the BJP! Official announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.