மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாதது குறித்து...
கு. இராசசேகரன்
மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று (ஆகஸ்ட் 1) தண்ணீர் திறக்கப்படாததால் கால்வாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் இன்று கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
கிழக்கு கரை கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கரை கால்வாய் மூலம் 18 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கால்வாய் 40.20 மைல் தூரமும், மேற்கு கால்வாய் மூலம் 27 மைல் தூரத்திற்கு சென்று காவிரியில் கலக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான 137 நாள்களுக்கு 9.06 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கால்வாய் பாசன பகுதிகளில் மழையை பொறுத்து பாசனத்தேவை குறையும்.
கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு முன்கூட்டியே ஜூலை 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அணையில் போதியளவு தண்ணீர் இருப்பு இல்லாததால் நடப்பு ஆண்டில் டெல்டா பாசனத்திற்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது அணையின் நீர்மட்டம் 73 அடியாக சரிந்துள்ள நிலையில், குறித்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணை கால்வாய் பாசனத்தின் 71 ஆண்டு கால வரலாற்றில், 62 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 35 முறையும், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பு 14 முறையும், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு பிறகு 13 முறையும் கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
3 முறை குடிநீர் தேவைக்காக 15 நாள்கள் திறக்கப்பட்டுள்ளது. 5 முறை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
கேரளம் மற்றும் கர்நாடகம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் இருக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் எல் நினோ பாதிப்பால் மழை பெய்யவில்லை.
பருவமழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் வழக்கமாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் நெல் உற்பத்தி பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Farmers dependent on canal irrigation are concerned as water was not released today (August 1) for the Mettur Dam's east and west canals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.