மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தற்போது வரும் நீரும் கிடைக்காது: அன்புமணி
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தற்போது வரும் நீரும் கிடைக்காது என அன்புமணி தெரிவித்துள்ளது பற்றி...
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தற்போது வரும் நீரும் தமிழகத்துக்குக் கிடைக்காது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்! கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர், நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டுக்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது.
ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம். ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது.
ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10,430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக14,470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது. ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில் தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.
கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேக்கேதாட்டு அணையில் தடுக்கப்பட்டு விடும். மேக்கேதாட்டு அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும்.
அதனால் தான் மேக்கேதாட்டு அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. எனவே, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேக்கேதாட்டு அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
Pattali Makkal Katchi leader Anbumani Ramadoss stated on Sunday (August 2) that if the Mekedatu dam is constructed, Tamil Nadu will not receive even the water it currently gets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.