மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு உரிமை உண்டு என டி.கே. சிவகுமார் பேசியது குறித்து...
மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு உரிமை உண்டு என அந்த மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் திங்கள்கிழமை (நவ. 9) தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜோசப் விஜய் சனிக்கிழமை கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய டி.கே. சிவகுமார், “நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்வர் அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் கர்நாடக அரசு அணையைக் கட்டுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கர்நாடக முதல்வரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து டி.கே சிவகுமார் இன்று பேசியதாவது:
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு தெளிவான உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு. அதேபோல், அதிலிருந்து 177.25 டிஎம்சி தண்ணீரைப் பெற தமிழகத்துக்கு உரிமை உண்டு.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக முதல்வர் இன்னும் பார்க்கவில்லை என்று நம்புகிறேன். இந்த அணையின் மூலம் அதிகம் பயன்பெறப் போவது தமிழகம்தான். எங்களுக்கு பெங்களூருவின் குடிநீருக்கும் மின்சாரத் தேவைக்கும் மட்டுமே பயன்பெறும். எனவே, அவர்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டு, இந்த நீர்த்தேக்கம் எங்களுக்கு மட்டும் அல்ல, அவர்களுக்குத்தான் பயனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.