நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் காவிரியாற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து வெறிச்சோடியது!
மேட்டூர் காவிரியாற்றங்கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது வெறிச்சோடி காணப்பட்டது குறித்து...
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் காவிரியாற்றங்கரை பகுதிகளில் போதுமான நீர்வரத்து இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் வழிபடவும், பூங்காவை பாா்வையிடவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மேட்டூருக்கு வந்து செல்வது வழக்கம்.
தங்களது குலதெய்வங்களின் சிலைகளையும் ஆயுதங்களையும் காவிரிக்கு எடுத்து வந்து நீராடி படைத்துவிட்டு செல்வார்கள். அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு கோழி பலியிட்டு பொங்கலிட்டு நேர்த்திக் கடனை செலுத்தி செல்வார்கள். இதனால் மேட்டூர் காவிரியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
Advertisement
Advertisement
ஆடிப்பெருக்கு நாளில் காவேரி பாலம் படித்துறைகள், அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள படித்துறைகள் உள்ளிட்ட மக்கள் நீராடும் பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் புதர்களை அகற்றி சரிசெய்து வைத்திருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு படித்துறைகள் பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் புதர்களை அகற்றப்படாமல் இருந்ததால் நீராடும் பகுதிகளில் புதர்கள் அதிகம் காணப்பட்டதால் குளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குறைந்த அளவிலேயே மக்கள் ஆங்காங்கே குட்டை போல இருக்கும் நீரில் நீராடி சென்றனர். இதனால் மக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
மேட்டூரில் நீராட வரும் பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் சண்முக சுந்தரம் தலைமையில் 120 போலீசாா் மற்றும் ஊா்காவல் படையினா் சிங்கப்பெண் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மக்க அதிகம் கூடும் இடங்களிலும் மேட்டூா் நகரம் முழுவதும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓா்க்ஷாப் காா்னரில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரேன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆழமான பகுதிகளில் குளிக்க கூடாது என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் தீயணைப்பு படையினர் 50 போ் ரப்பர் படகுடன் காவேரி பாலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யாரேனும் நீரில் மூழ்கினாள் அவா்களை விரைந்து சென்று காப்பாற்ற நீச்சல் வீரா்களும் நிறுத்தப்பட்டுள்ளனா். முதல் உதவி மையமும் மருத்துவ குழுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகிலிருந்து மக்கள் நீராடுவதற்காக ஆடிப்பெருக்கு நாளில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று தண்ணீர் திறக்கப்படாததால் அணைக்கட்டு முனியப்பன் கோயில் மட்டம் பகுதிகளில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று வருகின்றனர்.
அணைக்கட்டு முனியப்பன் கோயில், காவேரி பாலம் பகுதிகளில் பெண்கள் உடை மாற்றும் அறை தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏராளமான கடைகளும், இனிப்பு, காரம் விற்பனை நிலையங்கள் பேரிக்காய், அன்னாச்சி பழங்கள், மெகா சைஸ் அப்பளம் விற்பனை கடைகள் விளையாட்டு பொம்மைகள், பெண்கள் அலங்கார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகயளவில் மக்கள்கூட்டம் வராததால் கடைகளில் விற்பனை மந்தமாக உள்ளது.
Due to the lack of water inflow, the Aadi Perukku festival in the Mettur Cauvery riverbank areas lost its festive spirit and wore a deserted look.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.