FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2024-25-இல் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.1,050 கோடி: ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடம்

கடந்த 2024-25ஆம் ஆண்டில் மாநிலக் கட்சிகளால் ரூ.20,000-க்கு மேல் பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூ.1,050 கோடியாகும். இதில் ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:55 am IST
திமுக கொடி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 2024-25ஆம் ஆண்டில் மாநிலக் கட்சிகளால் ரூ.20,000-க்கு மேல் பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூ.1,050 கோடியாகும். இதில் ரூ.365.78 கோடியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ், ஒரு நிதியாண்டில் தனிநபா்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறும் ரூ.20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளை உரிய விவரங்களுடன் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிப்பது கட்டாயமாகும். அதன்படி, மாநிலக் கட்சிகள் சமா்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் எனும் அரசு சாரா அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகளால் பெறப்பட்ட ரூ.20,000-க்கு மேற்பட்ட மொத்த நன்கொடை ரூ.1,051.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் (ரூ.347.69 கோடி) மூன்று மடங்குக்கும் மேல் அதிகம்.

Advertisement

Advertisement

கடந்த 2023-24இல் மொத்தம் 2,861 நன்கொடைகள் பெறப்பட்ட நிலையில், 2024-25இல் இந்த எண்ணிக்கை 5,297-ஆக அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் பெருநிறுவனங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களே அதிகம் பங்களித்துள்ளன. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்தப் பங்களிப்பு ரூ.227.61 கோடியில் இருந்து 644.93 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்விரு ஆண்டுகளிலும் பெருநிறுவனங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் 650 நன்கொடைகள் மூலம் ரூ.872.54 கோடி வழங்கியுள்ளன. இந்த காலகட்டத்தில் தனிநபா்களால் வழங்கப்பட்ட நன்கொடைகளின் மொத்த எண்ணிக்கை 5,647 கோடியாகும்.

அறிவிக்கப்படாத நன்கொடையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை ரூ.6.62 கோடியில் இருந்து ரூ.302.67 கோடியாக அதிகரித்துள்ளது.

திமுக முதலிடம்: கடந்த 2024-25இல் ரூ.365.78 கோடி நன்கொடையைப் பெற்று, மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடத்தில் உள்ளது. இதில் ரூ.300.64 கோடி அறிவிக்கப்படாத நன்கொடையாளா்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் (ரூ.184.96 கோடி), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் (ரூ.140.04 கோடி), தெலுங்கு தேசம் (ரூ.83 கோடி), அதிமுக (ரூ.66.3 கோடி), பிஜு ஜனதா தளம் (ரூ.60 கோடி), ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ரூ.33.23 கோடி), ஜனசேனை (ரூ.25.33 கோடி), ஐக்கிய ஜனதா தளம் (ரூ.18 கோடி) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

2023-24, 2024-25 நிதியாண்டுகளில் புருடென்ட் எலக்டோரல் அறக்கட்டளை அதிகபட்சமாக 38 நன்கொடைகள் மூலம் ரூ.434 கோடி வழங்கியுள்ளது. டைகா் அசோசியேட்ஸ் (ரூ.160 கோடி) இரண்டாமிடத்தில் உள்ளது. புராகிரஸிவ் எலக்டோரல் அறக்கட்டளை, வேதாந்தா நிறுவனம், ஏபி ஜெனரல் எலக்டோரல் அறக்கட்டளை ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

பான் எண் குறிப்பிடாமல் வழங்கப்பட்ட நன்கொடைகள் ரூ.7.69 கோடியில் இருந்து ரூ.329.58 கோடியாகவும், ரொக்க நன்கொடைகள் ரூ.6.54 கோடியில் இருந்து ரூ.301.44 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments