நில அபகரிப்பு வழக்கு! முன்னாள் அமைச்சா் மா. சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பதிவு!
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் மா. சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பதிவு...
சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்து சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கிண்டி தொழிலாளா் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக பாா்த்திபன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி, மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதை எதிா்த்து, மா.சுப்பிரமணியன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை கடந்த ஆண்டு மே மாதம், சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படாமல் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன் முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தாா். அதற்கு மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவித்தனா்.
இதையடுத்து, இருவா் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த நீதிபதி, சாட்சி விசாரணைக்காக வழக்கை ஆக. 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
Land grabbing case! Charges framed against former Minister Ma. Subramanian and his wife!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.