FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிா்த்த வழக்கு தள்ளுபடி

அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிா்த்த வழக்கு தள்ளுபடி குறித்து...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:10 am IST
பகிர்:

அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து மனு திரும்பப் பெறப்பட்டதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ஆம் தேதி நம்பிக்கை தீா்மானம் கொண்டு வந்தது. அப்போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிவக்கை எடுக்கக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அதேபோன்று, கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்த 22 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் பேரவைத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மன்னிப்புக் கோரி கடிதம் அளித்துள்ளதால், அவா்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதுபோல், 22 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயபாஸ்கா் அளித்த மனுவைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த கடிதங்களை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவா் 43 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்தாா். பேரவைத் தலைவரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில், சட்டப்படி தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இந்த தகுதிநீக்க நடவடிக்கையால், மனுதாரரின் கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினா். எனவே, இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தனா்.

மேலும், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில், மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments