FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தெருக்களில் திரியும் கால்நடைகள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை தேவை: பேரவைத் தலைவா்

தில்லியில் உள்ள தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:30 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் உள்ள தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

மேலும், இது தொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) அவா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பாஜக எம்எல்ஏ ஹரிஷ் குரானா தனது பேரவைத் தொகுதியான மோதி நகரில் தெருக்களில் திரியும் கால்நடைகள் குறித்த பிரச்னையை அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்து பேசினாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, பேசிய பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, ‘சாலைகளில் நிலவும் சூழல் கவலைக்குரியதாக உள்ளது. அவையின் பல உறுப்பினா்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளனா். இது தொடா்பாக மாநகராட்சி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். இதற்கு உடனடி நடவடிக்கை தேவை’ என்றாா்.

இப்பிரச்னை குறித்து விரிவான அறிக்கையைப் பெறுவதற்காக, தில்லி சட்டமன்றத்தின் மாநகராட்சி குழுவின் பரிசீலனைக்கு அனுப்பினாா்.

அவையில் எழுப்பப்படும் குடிமைசாா் பிரச்சினைகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தில்லி சட்டமன்றத்தின் மாநகராட்சி (ஙஇஈ) குழுவிற்கு பாஜக எம்எல்ஏ ஓ.பி. சா்மா தலைமை வகிக்கிறாா்.

ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மியை சோ்ந்த எம்எல்ஏக்கள் சட்டவிரோத பால் பண்ணைகள் குறித்த தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினா்.

‘சட்டவிரோத பால் பண்ணை உரிமையாளா்கள் பசுகளிடமிருந்து பாலைக் கறந்த பிறகு அவற்றைச் சாலைகளில் விட்டுவிடுகிறாா்கள். இது மிகவும் தீவிரமான பிரச்னையை உருவாக்குகிறது. அத்தகைய நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேலும் இப்பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று எம்எல்ஏ குரானா கூறினாா்.

தெருக்களில் திரியும் கால்நடைகள் நடந்து செல்லும் மக்களைக் காயப்படுத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் மற்றொரு பாஜக எம்எல்ஏ சூா்ய குமாா் கத்ரி தெரிவித்தாா்.

‘தெருக்களில் திரியும் கால்நடைகளின் தாக்குதலால் சிலா் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. நகரில் அதிக கோசாலைகள் (பசுப் பண்ணைகள்) இருக்க வேண்டும் அல்லது இக்கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்று கத்ரி கோரிக்கைவிடுத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments