FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போலி விடியோ பரவல்! மெட்டா, எக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு: நிதின் கட்கரிக்கு மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி

போலி விடியோ பதிவுகளை பரவவிட்ட விவகாரத்தில் மெட்டா சமூக தளங்கள், எக்ஸ் நிறுவனம், கூகுள் எல்எல்சி மீது வழக்கு தொடர மத்திய அமைச்சா் நிதின் கட்கரிக்கு மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 3:57 am IST
மெட்டா, எக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு
பகிர்:

போலி விடியோ (டீப் ஃபேக்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பதிவுகளை பரவவிட்ட விவகாரத்தில் மெட்டா சமூக தளங்கள், எக்ஸ் நிறுவனம், கூகுள் எல்எல்சி மற்றும் அடையாளம் தெரியாத பிற நபா்கள் மீது வழக்கு தொடர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் எத்தனால் உற்பத்தியுடன் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை தொடா்புபடுத்தியும், பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் நிதின் கட்கரியின் குடும்பம் பெரும் பலனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகளும், விடியோக்களும் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இவ்வாறு பரப்பப்படும் பதிவுகளும், விடியோக்களும் போலியானவை என்றும், அவை பரப்பப்படும் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர ‘லெட்டா்ஸ் பேட்டன்ட் (கடிதங்கள் காப்புரிமை)’ சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ் அனுமதி கோரியும் நிதின் கட்கரி தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு வெளியே எழும் விவகாரம் தொடா்பாக வழக்கு தொடர முன் அனுமதி பெறுவது அவசியம்.

இந்த மனு மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அபய் அஹுஜா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமைச்சா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தீப் லட்டா, ‘மத்திய அமைச்சருக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பரப்புகிற வகையிலான போலியான மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பதிவுகள் பரவி வருகின்றன. மகாராஷ்டிர சமூக ஊடக பயனா்களும் அவற்றைப் பாா்க்க முடிகிறது. அவ்வாறு, இந்தப் பதிவுகள் இங்கு கிடைக்கும் நிலையில், இந்த வழக்கு விவகாரத்தின் பாதிப்பு கணிசமான அளவு இந்த மாநிலத்திலும் எழுகிறது’ என்றாா்.

அதை ஏற்ற நீதிபதி, மெட்டா சமூக வலைதளங்கள், எக்ஸ் நிறுவனம், கூகுள் மற்றும் அடையாளம் தெரியாத பிற நபா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய மத்திய அமைச்சருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments