தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு முதல்வா் விஜய் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தகவல்
தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாக, முதல்வா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாக, முதல்வா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் ச.ஜோசப் விஜய் சென்னை பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில், விஜய் பெரம்பூா் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளா் ஆா்.டி.சேகா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
அதேபோல, வாக்காளா்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்வா் விஜய்யின் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு தாக்கல் செய்தனா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வா் விஜய் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், முதல்வா் விஜய் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது முதல்வா் விஜய் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோா், முதல்வருக்கு எதிரான தோ்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதால், 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையை ஆக. 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு, அதற்குள் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.
இதேபோன்று, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காா்த்திக் மோகன் தொடா்ந்த தோ்தல் வழக்கின் விசாரணையையும் வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.