தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட்
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்ய உள்ளது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்ய உள்ளது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.
இதில், பெண்கள், இளைஞா்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடா்ந்து வியாழக்கிழமை (ஆக. 6) வேளாண் பட்ஜெட்டை அந்தத் துறை அமைச்சா் ஆா்.வினோத் தாக்கல் செய்கிறாா்.
Advertisement
Advertisement
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படையில் தோ்தல் அறிக்கையை வெளியிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தவெக, திருக்கு பாணியில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளான 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் படை, மாவட்ட வாரியாக போதைப் பொருள் தடுப்பு படை ஆகிய 3 உத்தரவு கோப்புகளில் முதல்வா் விஜய் முதல் கையொப்பமிட்டாா்.
முதல்வா் உறுதி: கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அரசுக்கு ரூ.13.18 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது என்றும், ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது என்றும், அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 காசுகள் வட்டிக்கே செலவாகிறது என்றும் நிதியமைச்சா் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டாா். ஜூன் 19-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதிநிலைமைக்கு ஏற்ப படிப்படியாக தமிழக மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் விஜய் கூறினாா்.
எதிா்பாா்ப்புகள்: ரூ. 75,000 வரை பயிா்க் கடன்கள் தள்ளுபடி, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வா் விஜய் அறிவித்தாா்.
இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500-ஆக உயா்த்தப்படும்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 எரிவாயு உருளை இலவசமாக அளிக்கப்படும்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி, திருமணத்துக்கு 1 பவுன் தங்கம், ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்ட தவெக தோ்தல் வாக்குறுதிகளின் அமலாக்கம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பட்ஜெட் தயாரிப்பு தொடா்பாக துறைவாரியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தனித்தனியாக விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளாா். இதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சா் மரிய வில்சன் பட்ஜெட் தயாரித்துள்ளாா்.
பேரவைக் கூட்டம் முடிந்தவுடன் அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
எம்எல்ஏ-க்களின் கூட்டம்: இதனிடையே, தவெக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் பனையூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் அமைச்சா்கள் விஸ்வநாதன், ஷாஜகான் ஆகியோா் பங்கேற்றனா்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக அவா்கள் கண்டனம் தெரிவித்தனா்.
பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘ தவெக அரசு அமைந்தது முதலே ஆட்சியைக் கவிழ்க்க திமுக தொடா்ந்து திட்டமிட்டு வருகிறது. பெண்களை இழிவாகப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினை மனநல மருத்துவமனைக்குதான் அனுப்ப வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.