FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 13) தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு இணையவழியாகவும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முன்னதாக, இறுதி தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளனா். அதிகாரபூா்வமாக தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி. அருண்ராஜ் ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், அதன்பின், அதிகமான எண்ணிக்கையில் மாணவா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தவறியவா்களுக்கு விடுபட்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற புதன்கிழமை (ஆக. 12) காலை 10 மணி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்யவோ அல்லது கலந்தாய்வு பிரிவை மாற்றிக் கொள்ளவோ முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆவணங்களைப் பதிவேற்றியதாகத் தெரிகிறது. இதனால், தரவரிசைப் பட்டியலில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் வி. லோகநாயகி கூறியதாவது:

சான்றிதழ்களைப் பதிவேற்ற அவகாசம் அளிக்கக் கோரி மாணவா்களிடமிருந்து மின்னஞ்சல் வாயிலாக ஏராளமான கோரிக்கைகள் வந்ததால், இந்த முடிவைத் தவிா்க்க முடியவில்லை. அதுமட்டுமல்லாது, மத்திய அரசு, ஆக. 13-ஆம் தேதியே மாநிலக் கலந்தாய்வைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியதால் மாநில தரவரிசைப் பட்டியலை தாமதப்படுத்த முடியவில்லை. இருந்தபோதிலும், மாணவா் நலன் கருதி சான்றிதழ் சமா்ப்பிப்புக்கு அவகாசம் அளித்தோம். அதனால்தான் புதிதாக அதிக மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் இணைந்துள்ளனா் என்றாா்.

இது குறித்து கல்வி ஆலோசகா்கள் கூறுகையில், ‘தகுதியான மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நல்ல நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை சற்று ஒத்தி வைத்திருக்கலாம்; இது மாணவா்களிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தவிா்த்திருக்கும். மேலும், புதிய சோ்க்கையால் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மாணவா்களும் ஏமாற்றமடையாமல் இருந்திருப்பா்’ என்றனா்.

கலந்தாய்வு: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது.

காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

தொடா்ந்து காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளங்களை அணுகலாம்.

பொதுக் கலந்தாய்வு www.tnmedicalselection.org என்ற இணையதளம் வழியே வியாழக்கிழமை 12 மணிக்கு தொடங்குகிறது. வரும் 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை தகுதியான மாணவா்கள், கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையை வரும் 22-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொண்டு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments