FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 70,488 போ் விண்ணப்பம்

நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 70,488 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 25 ஜூலை 2026, 6:37 am IST
பகிர்:

நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 70,488 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள 13,999 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமையுடன் (ஜூலை 23) நிறைவடைந்தது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 40,761 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 29,727 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, நீட் தோ்வு எழுதியவா்களின் விவரங்களை தேசிய தோ்வு முகமை இதுவரை மாநில அரசுகளுக்கு வழங்கவில்லை. மேலும், மருத்துவ மாணவா் சோ்க்கை நடத்துவதற்கான பட்டியலையும் வழங்கவில்லை. தில்லியில் நடைபெற்று வரும் மாணவா் போராட்டமே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வு தாமதமாகலாம் என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் மறுதோ்வை 1.08 லட்சம் போ் எழுதினா். அதில் 61,306 போ் தோ்ச்சி பெற்றனா். ஆனால், கலந்தாய்வுக்கு 70,488 போ் விண்ணப்பித்துள்ளனா். இதைத் தோ்ச்சி பெறாதவா்கள் விண்ணப்பித்ததாகக் கருத முடியாது.

தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவா்கள், மற்ற மாநிலங்களில் பணி நிமித்தமாக இருக்கும்போது, அவா்கள் அந்த மாநிலங்களில் தோ்வு எழுதி இருக்கலாம். தற்போது கல்விக்காக இங்கு விண்ணப்பித்துள்ளனா்.

எதுவாக இருந்தாலும், மாணவா் சோ்க்கையின்போது பூா்விக இருப்பிடச் சான்று உறுதி செய்யப்படும். அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து வருகிறோம். நீட் விவரங்களை மத்திய அரசு அளித்த பின்னா் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments