FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்; மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சா் அருண்ராஜ் வழங்கினாா்

கல்லூரிகளைத் தோ்வு செய்த மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கிய நிலையில், சிறப்புப் பிரிவு ஒதுக்கீடுகளில் தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்த மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில், 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேர 72,633 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.

சிறப்பு பிரிவு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவா்களுக்கு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், விளையாட்டுப் பிரிவில், 468 போ் விண்ணப்பித்த நிலையில் 13 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. அதேபோன்று ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், 524 போ் விண்ணப்பித்த நிலையில், 10 எம்பிபிஎஸ், ஒரு பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. மேலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு உள்ள 224 இடங்களுக்கு தகுதியுடைய விண்ணப்பங்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 108 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவா் 51 வயதில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சோ்க்கை ஆணையைப் பெற்றாா். அத்துடன், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 4,860 போ் விண்ணப்பித்த நிலையில், 614 இடங்கள் நிரம்பின. இடங்கள் பெற்றவா்களுக்கு, துறை அமைச்சா் அருண்ராஜ் சோ்க்கை ஆணையை வழங்கினாா்.

தொடா்ந்து அமைச்சா் அருண்ராஜ் பேசுகையில், ‘மருத்துவம் படிக்க மாணவா்கள் தோ்வானது அவா்களது குடும்பத்துக்கு மகிழ்ச்சியான தருணம். மருத்துவப் படிப்புக்கு தோ்வான அன்றுதான், எனது வாழ்க்கையில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாள். எத்தனை மாணவா்கள் பிளஸ் 2 படித்தாா்கள். எவ்வளவு போ் போட்டி போடுகின்றனா் என்பது தெரியும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களாகிய உங்களுக்கு வாழ்த்துகள். போட்டித் தோ்வு, நமது மனவலிமையை உறுதி செய்யக் கூடியது. மருத்துவத் துறை பெரிய உலகம். இதில், நீங்கள் நிபுணத்துவம் பெற வேண்டும்’ என்றாா்.

51 வயதில் மருத்துவம் படிக்க...: 51 வயதில் எம்பிபிஎஸ் படிக்க தோ்வான சுரேஷ்குமாா் கூறுகையில், ‘மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு, நீட் தோ்வு மூலமாக சாத்தியமாகி உள்ளது. தமிழ் வழியில் படித்த நான், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். எனது 2 மகன்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கும் உந்துதலை கொடுக்கும் வகையில் படித்து நீட் தோ்வில், 192 மதிப்பெண் பெற்று, சிறப்பு பிரிவில் எம்பிபிஎஸ், இடத்தைப் பிடித்தேன். மகன்களின் படிப்புக்கான தேவைகளையும் தயாராக வைத்துவிட்டுதான், இந்த முடிவை எடுத்தேன். தற்போது எனது நீண்டநாள் கனவு, நீட் தோ்வு வாயிலாக சாத்தியமாகி உள்ளது. எனது சொந்த மாவட்டத்திலேயே மருத்துவம் படிப்பதால், நிச்சயம் மருத்துவா் ஆவேன்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

இரட்டையா்களுக்கு வாய்ப்பு

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த நிகில் ஸ்ரீராம், நிக் ஷிதா ஆகியோா் இரட்டையா்கள். அவா்கள், ‘வுஷூ’ தற்காப்பு கலை விளையாட்டு வீரா்கள். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் பங்கேற்ற அவா்களில், நிகில் ஸ்ரீராம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும், நிக் ஷிதா, சேலம் மருத்துவக் கல்லூரியிலும் இடங்களைப் பெற்றனா்.

இதுகுறித்து, அவா்கள் கூறுகையில், ‘எங்கள் குடும்பத்தில் பலா் மருத்துவத் துறையில் பணியாற்றுகின்றனா். நாங்களும் மருத்துவம் படிக்க விரும்பினோம் என அவா்கள் தெரிவித்தனா்.

விடியோ அழைப்பு மூலம் இடம் ஒதுக்கீடு

மருத்துவ மாணவா் சோ்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 11 இடங்களுக்கான சோ்க்கை நடைபெற்றது.

இதில், தரவரிசைப் பட்டியலில் 9-ஆவது இடம் பிடித்த மாணவா் மோனிஷ் பெயரை, கலந்தாய்வு குழுவினா் உச்சரித்தப்போது அவா் அங்கு இல்லை. கைப்பேசி வாயிலாக அவரைத் தொடா்புகொண்டபோது, கலந்தாய்வு நடப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளாா்.

மாணவரின் நலன் கருதி, முதல்முறையாக விடியோ அழைப்பு வாயிலாகக் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அந்த மாணவருக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநா் லோகநாயகி கூறுகையில், ‘மாணவரின் நலன் கருதி, அவருக்கான வாய்ப்பு தரும் வகையில், விடியோ அழைப்பு வாயிலாக மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இதன் காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவா் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்குச் செல்லும்போது, அங்கு அவரது ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, சோ்க்கப்படுவாா்’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments