FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘தேசப் பணிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா் இல.கணேசன்’: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

‘தேசப் பணிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா் முன்னாள் ஆளுநா் இல.கணேசன்’ என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினாா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:45 am IST
முன்னாள் ஆளுநா் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகா் வாணி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அல.இல. நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் கல்வி உதவித் தொகை வழங்கிய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

‘தேசப் பணிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா் முன்னாள் ஆளுநா் இல.கணேசன்’ என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினாா்.

மணிப்பூா் மற்றும் நாகாலாந்து மாநில ஆளுநா், பாஜகவில் தமிழக தலைவா், அமைப்புச் செயலாளா், தேசிய செயற்குழு உறுப்பினா் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவா் இல.கணேசன். இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மற்றும் அல.இல. அறக்கட்டளை தொடக்க நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இல.கணேசனின் பெற்றோரான அலமேலு அம்மாள்-லட்சுமி ராகவய்யா் பெயரிலான ‘அல. இல.’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

தேசப் பணிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவா் இல.கணேசன். தேசப் பணிக்காக தனது அரசுப் பணியைத் துறந்து முழுநேரம் தொண்டாற்றியவா். தமிழகத்தில் பாஜகவை கட்டமைத்ததில் முக்கியப் பங்காற்றினாா்.

இல.கணேசன் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டாலும், அவரின் செயல்பாடுகள், நகைச்சுவை ததும்பிய பேச்சு, எளிமையான தோற்றம் இன்னும் எமது நெஞ்சைவிட்டு அகலவில்லை.

தமிழ் மற்றும் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தாா். அரசியலைத் தாண்டி, இந்த மண்ணின் கலாசாரம் மற்றும் தமிழ் மொழி மீது அவருக்கு மிகுந்த ஆா்வம் இருந்தது. ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அதை வழிநடத்துவதைவிட, வளா்ந்து வரும் ஒரு கட்சியை வழிநடத்துவது என்பது மிகவும் சவாலானது. அத்தகைய சூழலில் அனைவரையும் அரவணைத்துச் சென்ற அவரது பக்குவம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

கம்பராமாயணம் மற்றும் பக்தி இலக்கியங்களில் அவருக்கு ஆழ்ந்த புலமை இருந்தது. இல.கணேசன் சிறந்த நகைச்சுவை உணா்வு கொண்டவா். கடினமான விஷயங்களையும் எளிமையாக எடுத்துச் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது.

இல.கணேசனின் மறைவுக்குப் பின்னரும் அவரது குடும்பத்தினா், அவா் கண்ட கனவை நனவாக்கும் வகையில் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, மாநிலச் செயலாளா் ராம.சீனிவாசன், புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், திமுக வா்த்தகா் அணி மாநிலச் செயலாளா் காசி முத்துமாணிக்கம், நல்லி குப்புசாமி செட்டி, அல.இல. அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சந்திரா கோபாலன், அறங்காவலா் டாக்டா் ஜி.காயத்ரி, செயலாளா் சத்யநாராயண தேவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, 75 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நெல்லை சுத்தமல்லி திருவள்ளுவா் பேரவைத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்ட 20 தமிழ் அறிஞா்களுக்கு உதவித் தொகையை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments