அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி பற்றி...
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மரபு ஆகும். இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடித் தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன.28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையில், மாநிலப் பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசுத் தரப்பில், உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்துப் பாடப்பட வேண்டும். அதாவது, முதலில் வந்தே மாதரம் அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாநிலப் பாடல் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்குவதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆக.12-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதில், மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய சுற்றறிக்கையின்படி, மாநிலப் பாடலை எப்போது பாட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசும் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், மேற்கொண்டு எந்தத் தீர்வும் காண வேண்டியது இல்லை எனக்கூறி, வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.