வனத்துறை அதிகாரிகளை ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா்களாக நியமிக்க கூடாது: அன்புமணி
வனத்துறை அதிகாரிகளை ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா்களாக நியமிக்க கூடாது என அன்புமணி கூறியிருப்பது குறித்து...
சென்னை: ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான், கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித் தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரும் தான். வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.
Advertisement
Advertisement
ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.
இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குநர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குநர்களாக நியமிப்பதை தமிழக அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.
ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப் படும். இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குனர்களுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.
இன்னொருபுறம், தமிழக அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் பதவிக்கு ஒப்பானதாகும். இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குநர், துணை இயக்குநர், இனை இயக்குநர், கூடுதல் இயக்குனர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். மாறாக, திட்ட இயக்குநர் பணிக்கு அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.
எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக திட்ட இயக்குநர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
Why appoint forest service officers as Project Directors of DRDA? Public services in rural areas will be affected!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.