பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு
பள்ளிக் கட்டடங்களுக்கு ஏற்ப 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும் என ஆதவ் அர்ஜுனா கூறியது பற்றி..
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு கட்டடங்களின் தகுதிக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் இன்று பேசும்போது, பள்ளிக் கல்வித் துறையின் ஒரு முக்கிய பிரச்னை, அது பொதுப் பிரச்னையும் கூட. அவற்றை முதல்வர் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். போர்க்கால அடிப்படையில் இதனை கவனத்துக்குக் கொண்டு வந்து சரி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள மிகப்பெரிய பிரச்னை உள்ளது. அதுதான் கழிப்பறை வசதி. இவற்றை சரி செய்ய வேண்டியது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் முக்கிய கடமை. கடந்த 30 நாள்களாக பள்ளிகளின் மத்திய ஒருங்கிணைந்த தகவல்களை தொகுத்து வருகிறோம்.
Advertisement
Advertisement
பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 6279 உயர்நிலை பள்ளிகள், 177 கலைக் கல்லூரிகள் உள்ளிட்ட 6620 கல்வி நிறுவனங்கள் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ளன.
பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அந்தப் பணி 40 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. சில பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. குறிப்பாக மகளிர் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இருக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லை. அரசு கல்லூரிகளில்கூட இந்த பிரச்னை உள்ளது.
எனவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பள்ளிகளை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். பள்ளிகளின் கட்டடத்தை உரிய துறை நிபுணர்கள் சோதித்து அந்தக் கட்டடம் தரமாக இருக்கிறதா என்று உறுதி செய்யப்படும். ஒருவேளை பலவீனமாக இருந்தால் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதனை சுற்றி சீல் வைக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறைக்கும் அறிவித்துவிட்டு அங்கு பள்ளியை செயல்பட அனுமதி மறுக்கப்படும்.
தரமாக இருக்கிறது, ஆனால், மேம்படுத்த வேண்டும் என்றால் மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் கட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அறியப்படும்.
இதற்கான நிதி எவ்வளவு தேவை என்பது பரிசீலிக்கப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஓராண்டுக்குள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி மையங்கள் போலவே அரசுக் கல்வி நிலையங்களையும் மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித் துறை மூலம் வெள்ளை அறிக்கை உருவாக்கி முதல்வரிடம் அளிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாவைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், திமுக ஆட்சியில் 5 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை என்பது போல அமைச்சர்கள் பேசுவது சரியல்ல, இல்லாத இடங்களில் கட்ட வேண்டும், ஆனால் கழிப்பறைகளே இல்லை என்பது போல பேசுவது தவறு என திமுக தரப்பில் கூறப்பட்டது.
3 types of stickers affixed to schools: Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.