அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்
அமைச்சர் மரிய வில்சன் கூறிய குற்றச்சாட்டுக்கு பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மறுப்பு...
அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் கட்டாயப்படுத்தி பணம் பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்றும் அமைச்சர் மரிய வில்சன் இன்று பேரவையில் குற்றம் சாட்டினார்.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"இன்று நிதியமைச்சர் உயர்கல்வி சம்பந்தமாக அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் திடீரென்று இடையில், “இதற்கு நானே சாட்சி; இந்த எவிடன்ஸ், அந்த எவிடன்ஸ்” என்று கூறுகிறார். அவர் ஒன்றும் பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. அவர் நின்று பேசிய இடம் சட்டமன்றம். சட்டமன்றத்தில் யார் நின்று என்ன வார்த்தை பேசினாலும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
சட்டமன்றத்திற்கு வெளியே பேசுவதற்கும், சட்டமன்றத்தில் நின்று பேசுவதற்கும் சட்டரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே, “கொடுத்தேன், கொடுத்தேன்” என்று ஆதாரமில்லாமல் கூறுவது மிகப்பெரிய தவறு. குறிப்பாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருவரால் என்மீது அவதூறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு அலுவலகத்தை வைத்து இவர்கள் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக நான் அவர்மீது ரூ. 50 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
கடந்த டிசம்பர் மாதம், முறையாகப் பள்ளிகள் நடத்தப்படவில்லை என்பது தொடர்பாக உள்ளூர் கல்வி அதிகாரிகள் கண்டறிந்தபோது, உடனடியாக அந்த நபர்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். “அவருடைய பின்னணி இப்படிப்பட்டது” என்று அதிகாரிகள் கூறியபோதும், “அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை; முறையான அனுமதி இல்லாமல் பள்ளி நடத்தப்பட்டிருந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினேன்.
அவர் அனுமதி இல்லாமல் பள்ளி நடத்தியது மட்டுமல்லாமல், சில இடங்களில் போலியாகக் கையெழுத்திட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி தொடங்குவதாகக் கையெழுத்திட்டு, பல்லாவரத்தில் பள்ளியை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக அவருக்கு சம்பந்தப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில்தான் அவர் பேசியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு அமைச்சரின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் இத்தகைய அவதூறான குற்றச்சாட்டுகளை வைப்பது மிகவும் தவறானது.
அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். ஒரு அமைச்சராக இருந்து “நானே சாட்சி” என்று கூறுவது மிகவும் தவறானது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.
அவர் “நானே சாட்சி” என்று கூறியிருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரை உடனடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் கோரிக்கை" என்று கூறினார்.
Directorate of Vigilance and Anti-Corruption must take action against Minister Maria Wilson: Anbil Mahesh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.