ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!
மேட்டூர் அணையில் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் விஜய் வருவது பற்றி...
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக வரும் வெள்ளிக்கிழமை தண்ணீரைத் திறந்துவிட முதல்வர் ஜோசப் விஜய் வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், முன்னேற்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணைப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவ மழையை எதிர்நோக்கி தண்ணீர் திறக்கப்படும்.
Advertisement
Advertisement
குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.
இந்த நிலையில், நடப்பாண்டில் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12-ல் டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று, ஆக. 26, காலை அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக உயர்ந்துள்ளது. நாளை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியே எட்டும்.
எனவே, நாளை மறுநாள் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 92-வது ஆண்டாக தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறப்பதற்காக முதல்வர் விஜய் நாளை மறுநாள் மேட்டூர் வரவுள்ளார். இதற்கான ஆயத்த பணிகளில் நீர்வளத் துறையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் மின்விசை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை நீர்வளத் துறை செய்து வருகிறது.
மேலும், மேடை அமைக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவுள்ள செய்தியறிந்து டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Chief Minister Vijay to open Mettur Dam on August 28 - Preparations underway!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.