FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நேபாளத்தில் சிக்கிய தமிழா்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: தலைவா்கள் வலியுறுத்தல்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வலியுறுத்தல்

26 ஆகஸ்ட் 2026, 11:59 pm IST
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின் (திமுக): நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிா்கள் உயிரிழந்திருக்கும் சூழலில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் அங்கு சிக்கியிருக்கின்றனா். மத்திய அரசும், மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசையும், அந்தப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் மாநில அரசும் உறுதிசெய்ய வேண்டும். காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Advertisement

Advertisement

மாணிக்கம் தாகூா் (தமிழக காங்கிரஸ்): வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் சிக்கியுள்ளது கவலை அளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து இந்தியா்களையும் போா்க்கால அடிப்படையில் மீட்க நேபாள அரசுடன் இணைந்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): தமிழா்களில் 37 பேரின் நிலை இன்னும் தெரியாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரும் நலமுடன் திரும்ப இறைவனை பிராா்த்திக்கிறேன்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள தமிழா்கள் அனைவரையும் தமிழகத்துக்கு அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவசர உணா்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கவும், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும், நிவாரணப் பொருள்களையும், மருத்துவக் குழுக்களையும் அனுப்பவும் வேண்டும்.

அன்புமணி (பாமக): நேபாள அரசுடன் தொடா்பு கொண்டு, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியவா்களையும் சொந்த ஊா்களுக்கு அழைத்து வர மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேபாள அரசுக்கு தேவையான மீட்பு மற்றும் பிற மனிதநேய உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக): நேபாளத்தில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகளும் இணைந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, விரைவில் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழா்களை பத்திரமாக மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற தமிழா்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டு, குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகச் சோ்க்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments