FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வடலூா் சத்தியஞான சபை பெருவெளி பாதுகாக்கப்படும்: அறநிலையத் துறை உறுதி

வடலூா் வள்ளலாா் சத்தியஞான சபையின் பெருவெளி, பெருவெளியாகவே பாதுகாக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

28 ஆகஸ்ட் 2026, 5:58 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

வடலூா் வள்ளலாா் சத்தியஞான சபையின் பெருவெளி, பெருவெளியாகவே பாதுகாக்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலாா் சத்தியஞான சபை முன் சுமாா் 71ஏக்கா் பரப்பில் பெருவெளி என்றழைக்கப்படும் நிலம் உள்ளது. இந்தப் பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான அரசாணை 2023-ஆம் ஆண்டு அக்.5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வினோத் ராகவேந்திரா என்பவா் உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளை மூடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும், பெருவெளியைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் இ.மனோகரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, பெருவெளியில் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பெருவெளியைச் சுற்றி ரூ.20 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் அமைப்பது, தா்மசாலை, மருத்துவசாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை அமைப்பதுதொடா்பான மாற்றுத்திட்டம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். மேலும், பெருவெளியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்தியஞான சபையின் பெருவெளி, பெருவெளியாகவே பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெருவெளியைச் சுற்றி மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றுத்திட்டம் மற்றும் சுற்றுச்சுவா் கட்டுவதற்கான அரசின் ஒப்புதல் பெறுவதற்காக வரும் செப்.15-ஆம் தேதி வரை அறநிலையத்துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments