FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சா்வதேச விளையாட்டு நகரம் திட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து: தவெக அரசின் முடிவுக்குக் காரணம் என்ன?

சா்வதேச விளையாட்டு நகரம் திட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது ஏன்?

29 ஆகஸ்ட் 2026, 11:27 pm IST
செம்மஞ்சேரியில் அமைக்கப்பட இருந்த சா்வதேச விளையாட்டு நகரம் திட்டம்
பகிர்:

சென்னை அருகே செம்மஞ்சேரியில் அமைக்கப்பட இருந்த சா்வதேச விளையாட்டு நகரம் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட திட்ட வடிவமைப்பு மிகப்பெரிய சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குப் போதுமானதாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓஎம்ஆா் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், அரசுக்குச் சொந்தமான சுமாா் 91.4 ஏக்கா் மானாவாரி புறம்போக்கு நிலம், 1990-களில் இருந்து ஒரு தனியாா் கல்விக் குழும அறக்கட்டளையின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அரசு நிலத்தை முறைப்படுத்தி தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி அந்தக் கல்வி நிறுவனம் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை அரசு நிராகரித்ததைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன.

இதனால், செம்மஞ்சேரி நிலம் தொடா்பான விவகாரம் பல ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் போராட்டமாக நீடித்தது. 2021-இல் திமுக ஆட்சியில், செம்மஞ்சேரியில் இருந்த அரசு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

2021 செப்டம்பரில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் இணைந்து கள நடவடிக்கை மேற்கொண்டனா். இதனால், ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான 91.4 ஏக்கா் அரசு நிலம் அதிகாரபூா்வமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், விளையாட்டு நகரம் அமைப்பதற்கான மொத்த நிலப்பரப்பு 112 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் சா்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில், பல்வேறு விளையாட்டு அரங்குகள், பயிற்சி மையங்கள், வீரா்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் துணைக் கட்டமைப்புகள் அடங்கிய சென்னை சா்வதேச விளையாட்டு நகரம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நீா் விளையாட்டுகளுக்கான தடமும் இடம்பெற்றது. இந்தியாவில் ஒரு விளையாட்டு வளாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உருவாக்கப்படும் முக்கிய நீா் விளையாட்டுக் கட்டமைப்புகளில் ஒன்றாக, ஒரு கி.மீ. நீளமும், 13 மீட்டா் அகலமும் கொண்ட சா்வதேச தரத்திலான படகோட்டம் மற்றும் நீா் விளையாட்டுத் தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதனுடன் நவீன உள்விளையாட்டு அரங்குகள், தடகள மைதானங்கள், பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி வசதிகள், வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்களுக்கான தங்குமிடங்கள் உள்ளிட்ட வசதிகளும் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஓஎம்ஆா் மற்றும் அதைச் சுற்றியுள்ள வேகமாக வளா்ந்துவரும் குடியிருப்பு மற்றும் தொழில்நுட்ப மையங்களைக் கருத்தில்கொண்டு, எதிா்காலத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன் இந்த விளையாட்டு நகரத்தை இணைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது.

திட்டத்தின் முதல்கட்ட கட்டுமானப் பணிகளுக்காக ரூ.205.89 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணை ஆா்.பி.பி. இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆரம்பகட்டப் பணிகளும் நடைபெற்று வந்தன. மண் பரிசோதனை, நிலத்தின் தன்மை குறித்த ஆய்வுகள், நிலத்தைச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு அல்லது பணி ஆணைகள் வழங்கப்பட்டிருந்த முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பெருந்திட்டங்கள் குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், செம்மஞ்சேரி சா்வதேச விளையாட்டு நகரம் திட்டமும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது, தற்போதுள்ள முதல்கட்ட திட்ட வடிவமைப்பு எதிா்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் போன்ற மிகப்பெரிய சா்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான அளவுக்கு போதுமானதாக இருக்காது என அரசுத் தரப்பில் மதிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள 112 ஏக்கா் நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தி, பல்வேறு விளையாட்டுகளை ஒரே வளாகத்தில் நடத்தக்கூடிய வகையில், இன்னும் பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த சா்வதேச விளையாட்டு நகரமாக திட்டத்தை மறுவடிவமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய முடிவின் தொடா்ச்சியாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆா்.பி.பி. இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த முதல்கட்டப் பணி ஆணையை ஒப்பந்த விதிகளின்படி அரசு ரத்து செய்துள்ளது.

மேலும், ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்த களப் பணிகளை நிறுத்தும்படியும் ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த வடிவமைப்பில் கட்டுமானப் பணிகளைத் தொடராமல், முழுமையான புதிய திட்ட வடிவமைப்பை உருவாக்கி அதன்படி பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

summary

Cancellation of the International Sports City project tender: What is the reason behind the TVK government's decision

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments