FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை அருகே சர்வதேச விளையாட்டு நகரம்! சாத்தியமும் அவசியமும்!!

சென்னை அருகே சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளை ஈர்க்கும் நோக்கில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரத்தை உருவாக்கும் திட்டம் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதைப் பற்றி...

7 செப்டம்பர் 2026, 4:18 am IST
சென்னை அருகே சர்வதேச விளையாட்டு நகரம். - @UpdatesChennai
பகிர்:

சென்னை அருகே சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளை ஈர்க்கும் நோக்கில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரத்தை உருவாக்கும் திட்டம் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது.

சென்னை அருகேயுள்ள செம்மஞ்சேரியில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிக்காக ஆர்.பி.பி. இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.205.89 கோடி மதிப்பிலான பணி ஆணையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.

திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பெரிய போட்டிகளை நடத்தும் வகையில் மறுவடிவமைக்க அரசு முடிவு செய்துள்ளதே இதற்குக் காரணம்.

Advertisement

Advertisement

சென்னையின் தேவை இன்னொரு விளையாட்டு வளாகமா? அல்லது தமிழ்நாட்டின் விளையாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய, சர்வதேசத் தரத்திலான, ஒருங்கிணைந்த விளையாட்டு நகரமா? இதுதான் இப்போதைய கேள்வி. இரண்டாவது தேர்வுதான் தமிழகத்துக்கு அதிக பலனைத் தரும் என்பது பலரது கருத்து.

சென்னைக்கு அருகே சர்வதேசத் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறையினர் மட்டுமன்றி, சுற்றுலாத் துறையினரும் பொருளாதார வல்லுநர்களும் கருதுகின்றனர்.

குறைந்தபட்சம் 250 முதல் 300 ஏக்கர் பரப்பில், ரூ.3,500 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையிலான முதலீட்டில், சர்வதேசப் போட்டிகள் மட்டுமன்றி, விளையாட்டு மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது என்கின்றனர்.

ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டத்தை மறுவடிவமைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், குறுகிய காலத் தேவைக்காக ஒரு விளையாட்டு வளாகத்தை உருவாக்குவதைவிட, அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கணக்கிட்டு முழுமையான விளையாட்டு நகரத்தை உருவாக்குவது தமிழகத்துக்கு நீண்டகாலப் பலனை அளிக்கக்கூடியதாக இருக்கும். செம்மஞ்சேரி, திருவிடந்தை, வண்டலூர், குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த விளையாட்டு நகரத்தை திட்டமிடலாம் என ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

விளையாட்டு நகரம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு சர்வதேச விளையாட்டு நகரம் என்பது ஒரு பெரிய மைதானம் அல்லது 30,000 முதல் 40,000 பேர் அமரக்கூடிய சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கம் மட்டும் அல்ல.

சர்வதேசப் போட்டிகளுக்கான ஆடுகளம், வீரர்கள் பயிற்சி பெற தனி மைதானங்கள், விளையாட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெறுவது, தங்குவது, கல்வி கற்பது, விளையாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவது என அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த கட்டமைப்பாக இருக்க வேண்டும். இவற்றுக்கான கட்டமைப்பும், உட்கட்டமைப்பும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட வேண்டும்.

பல்நோக்கு விளையாட்டு உள்ளரங்கம்

8,000 முதல் 12,000 பேர் அமரக்கூடிய உள்ளரங்க விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இறகுப்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, டேக்வாண்டோ, பளுதூக்குதல், வாள்வீச்சு, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளை நடத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட வேண்டும்.

நீச்சல் மற்றும் நீர்விளையாட்டு அரங்கம், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தைப் போட்டிகளுக்கான வசதிகள் இருப்பதுடன் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த, விளையாட்டு நகரத்தின் முக்கிய அங்கமாக, செயல்திறன் மேம்பாட்டு மையம் ஒன்றையும் அமைக்க வேண்டியது அவசியமாகும்.

இதில் விளையாட்டு அறிவியல் ஆய்வகம், வீரர்களின் உடல் இயக்கவியல் ஆய்வு, செயல்திறன் பகுப்பாய்வு, வலிமை மற்றும் உடற்தகுதிப் பயிற்சி, உடலியக்க சிகிச்சை, விளையாட்டு உளவியல், ஊட்டச்சத்து உள்ளிட்ட வசதிகள் இருக்கவேண்டும். செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, காணொலிப் பகுப்பாய்வு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வசதிகள் இங்கு இருக்க வேண்டும்.

விளையாட்டு கிராமம்

சர்வதேசப் போட்டிகளை நடத்தும்போது வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் தங்குவதற்காக 3,000 முதல் 5,000 பேருக்கான 'விளையாட்டு கிராமம்' ஒன்றும் இதே வளாகத்தில் அமைய வேண்டும். போட்டிகள் இல்லாத காலங்களில், விளையாட்டு அகாதெமிகள், மாணவர் விடுதிகள், பயிற்சி மையங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் வகையில் இவற்றை வடிவமைத்தால் முதலீட்டின் பயன்பாடு அதிகரிக்கும்.

விளையாட்டு மருத்துவ நகரம்

விளையாட்டுக் காயங்களுக்கான தனிப்பட்ட மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் உருவாக்கப்பட வேண்டும். எலும்பியல், விளையாட்டுக் காயங்கள், உடலியக்க சிகிச்சை, மறுவாழ்வு, மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றுக்கான வசதிகள் இதில் இருக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமன்றிப் பிற நாடுகளைச் சேர்ந்த வீரர்களையும் சிகிச்சைக்காக ஈர்க்க முடியும்.

விளையாட்டுப் பல்கலைக்கழகம்

விளையாட்டு நகரத்துடன் விளையாட்டு பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி மையத்தையும் இணைப்பது நீண்டகாலத்தில் மிகப்பெரிய பலனை அளிக்கும். விளையாட்டு அறிவியல், பயிற்சியாளர் கல்வி, விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊட்டச்சத்து, விளையாட்டு உளவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு தரவுப் பகுப்பாய்வு, விளையாட்டு ஊடகம் உள்ளிட்டவற்றை இங்கு கற்பிக்கலாம். இதன்மூலம் பள்ளி நிலையிலேயே அடையாளம் காணப்படும் திறமையான வீரர்களுக்குப் பயிற்சி, கல்வி, மருத்துவம் என ஒருங்கிணைந்த ஆதரவை வழங்க முடியும்.

விளையாட்டுத் தொழில்நுட்பப் பூங்கா

செயற்கை நுண்ணறிவு, அணியக்கூடிய சாதனங்கள், வீரர்களின் செயல்திறன் கண்காணிப்பு, மெய்நிகர் பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு ஆடைகள், ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கான விளையாட்டுத் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றையும் இங்கு உருவாக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டுத் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான வளர்த்தெடுப்பு மையங்களையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களையும் இதன் ஒரு பகுதியாகக் கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த விளையாட்டு ஊடக மையம்

சர்வதேசப் போட்டிகளை நடத்தும்போது தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான ஒளிபரப்பு வசதிகள் அவசியம். எனவே, சர்வதேச ஊடக மையம், தொலைக்காட்சிப் படப்பிடிப்பு அரங்குகள், செய்தியாளர் மையம், வர்ணனை அறைகள், அதிவேக இணையம், ஒளிபரப்பு கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த , விளையாட்டு ஊடக மையம் ஒன்றையும் அமைப்பது மிகவும் அவசியமாகிறது. இதன்மூலம் சென்னையை தென்னிந்தியாவின் விளையாட்டு ஊடக மையமாக உருவாக்கவும் வாய்ப்புள்ளது.

எவ்வளவு நிலம் தேவை? என்ன செலவாகும்?

இத்தகைய ஒருங்கிணைந்த விளையாட்டு நகரத்துக்கு சுமார் 250 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையில் நிலம் தேவைப்படலாம். சர்வதேசத் தரத்தில் இந்த விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கு சுமார் ரூ.4,000 கோடிமுதல் ரூ.5,000 கோடி வரையில் தேவைப்படும் எனக் கருதப்படுகிறது. திட்டத்தின் அளவு, கட்டுமானத் தரம், நிலத்தின் தன்மை, தொழில்நுட்ப வசதிகள், நிலம் கையகப்படுத்தும் செலவு ஆகியவற்றைப் பொறுத்து இந்த மதிப்பீடு மாறுபட வாய்ப்பிருக்கிறது.

விளையாட்டுப் பொருளாதார நகரம்

சென்னையை தென்னிந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகவும், தமிழகத்தை சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், வீரர்கள் பயிற்சி, விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டுத் தொழில்நுட்பத்துக்கான முக்கிய மையமாகவும் உருவாக்க முடியும்.

இத்தகைய ஒருங்கிணைந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆசிய அளவிலான பல்வேறு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான திறனை சென்னை பெறும். எனவே, தற்போதைய விளையாட்டு நகரத் திட்டத்தை அவசர கட்டுமானத் திட்டமாக அணுகாமல், எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்துறை சர்வதேசப் போட்டிகளை நடத்தும் திறன் கொண்டதாக வடிவமைப்பதே தமிழகத்துக்கு அதிக பலனைத் தரும்.

விளையாட்டு நகரத்தை உருவாக்குவதற்கான நிதி ஒதுக்கீடு என்பது ஒரு விளையாட்டு அரங்குக்கான செலவு அல்ல; மாறாக, அடுத்த தலைமுறைக்கான, தமிழகத்தின் விளையாட்டுப் பொருளாதார உள்கட்டமைப்புக்கான முதலீடு என்றே தமிழக அரசு இதைப் பார்க்க வேண்டும்.

பிரத்யேக காப்பீடு - மருத்துவக் கட்டமைப்பு அவசியம்!

சர்வதேச விளையாட்டு நகரங்கள் அமையும் போது அதற்கான சிறப்பு மருத்துவக் கட்டமைப்பும், காப்பீட்டு சேவைகளும் அவசியமாகின்றன. விளையாட்டு பயிற்சியைப் பொருத்தவரை காயங்கள் தவிர்க்க முடியாத ஒன்று.

அதைக் குணப்படுத்த தேவையான சிறப்பு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், புனர்வாழ்வு பயிற்றுநர்கள் என ஒருங்கிணைந்த குழு தேவைப்படுகிறது என்கிறார் விளையாட்டு மருத்துவ சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் சரவணன் மனோகரன்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் விளையாட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இவர் மேலும் கூறுகையில், காயங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் விளையாட்டு மருத்துவக் குழுவின் கண்காணிப்பு ஆலோசனை அவசியமாகிறது. மற்றொருபுறம் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். விளையாட்டு நகரங்கள் அமைந்திருக்கும் பல வெளிநாடுகளில் இத்தகைய கட்டமைப்பே நடைமுறையில் உள்ளன. இவை அனைத்தும் சாத்தியமானால்தான் விளையாட்டு வீரர்களின் உடல் திறனையும், செயல் திறனையும் உறுதி செய்ய முடியும்.

குஜராத்தின் விளையாட்டுக் கட்டமைப்பு முயற்சி

குஜராத்தின் அகமதாபாதில் உருவாக்கப்பட்டு வரும் சர்தார் வல்லபபாய் படேல் விளையாட்டு வளாகம் இந்தியாவில் உருவாகும் மிகப்பெரிய விளையாட்டுக் கட்டமைப்பு முயற்சிகளில் ஒன்றாகும்.

மத்திய அரசின் தகவலின்படி, இதற்கான திட்ட மதிப்பு ரூ.4,600 கோடி; இதில் ரூ.3,200 கோடி அரசு முதலீடும், ரூ.1,400 கோடி பொதுப் பங்களிப்பும் என திட்டமிடப்பட்டது. சர்வதேசத் தரத்திலான பல்வேறு விளையாட்டு வசதிகளை ஒரே இடத்தில் கொண்டுவருவதே இதன் நோக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

விளையாட்டில் ஆர்வமுள்ள தலைமுறையை உருவாக்க வேண்டும்

சர்வதேச விளையாட்டு நகரம் என்பது ஒரு நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்குத் தேவையான ஒன்று. முந்தைய அரசு இதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தது. தற்போதைய அரசு இத்திட்டத்தை புதுப்பித்து செயல்படுத்தும் என அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

என்னென்ன வசதிகள் விளையாட்டு நகரத்தில் இடம் பெறும் என அரசு இன்னும் தீர்மானிக்கவில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே சிறந்த கூடைப்பந்து வீரர்தான். அவருக்கு இதுதொடர்பாக ஒரு திட்டமிடல் இருக்கும். ஒரு விளையாட்டு நகரம் என்பது சர்வதேச அளவில் பதக்கங்களை வீரர்களை உருவாக்குவதில் மட்டுமன்றி, விளையாட்டில் ஆர்வமுள்ள ஒரு தலைமுறையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

வி.பாஸ்கரன்

சர்வதேச நகரமானது அதிகம் பேர் பின்பற்றும் விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் குறைந்தது 2 அல்லது 3 பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும். குறைந்தது 8 வயதில் இருந்து சிறுவர், சிறுமியர் பயிற்சி பெறும் வகையில் தனி அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.

பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். விளையாட்டுக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கலாம். அப்போதுதான் அவற்றின் பராமரிப்புச் செலவை ஈடுகட்ட முடியும். நவீன உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மருத்துவ நிபுணர்கள், மருத்துவ வசதிகள் கொண்டதாக அந்த நகரம் அமைய வேண்டும்.

- வி.பாஸ்கரன், இந்திய ஹாக்கி அணி முன்னாள் பயிற்சியாளர்.

ஒலிம்பிக் நகரம் அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஹாக்கி விளையாட்டில் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பதக்கங்களை வென்றுள்ளோம். இதில் ரங்கநாதன், பாஸ்கரன், முனீர் சேட், 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சார்லஸ் கொர்னேலியஸ், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தா மற்றும் பிலிப்ஸ் ஆகிய தமிழக வீரர்களும் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தனர்.

க.சேவியர் ஜோதி சற்குணம்

தற்போது தமிழகத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்துவது மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல தகுதியான வீரர்களைக் கண்டறிந்து பயிற்சி கொடுத்து சாதிக்க வைப்பது என்ற லட்சியத்தோடு அரசின் சார்பில் சென்னையில் உலகத் தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பாராட்டுக்குரியது. உலகத் தரத்தில் விரிவாக திட்டமிட்டால் தமிழக விளையாட்டு வீரர்கள் பல பதக்கங்களை அள்ளி வருவார்கள். சர்வதேச போட்டிகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதன் மூலம் வருவாய் கிடைக்கும்.

- க.சேவியர் ஜோதி சற்குணம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் (ஓய்வு).

தமிழகத்துக்கு கிடைக்கும் 10 பெரிய பலன்கள்

  • சர்வதேசப் போட்டிகள்- உலக மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளை ஈர்க்க முடியும்.

  • விளையாட்டுச் சுற்றுலா- வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை அதிகரிக்கும்.

  • வேலைவாய்ப்பு- விளையாட்டு மட்டுமல்லாமல் மருத்துவம், தொழில்நுட்பம், சுற்றுலா, ஊடகம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்பு.

  • சர்வதேசத் தரத்தில் வீரர்கள் உருவாக்கம்- ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான திறமைகளை அறிவியல்ரீதியில் வளர்க்க முடியும்.

  • விளையாட்டு மருத்துவம்- சென்னையை தென்னிந்தியாவின் விளையாட்டு மருத்துவ மையமாக மாற்றலாம்.

  • விளையாட்டுத் தொழில்நுட்பம்- செயற்கை நுண்ணறிவு, அனலிடிக்ஸ் போன்ற புதிய தொழில்களில் புத்தாக்க நிறுவனங்களை (ஸ்டார்ட்அப்) உருவாக்கலாம்.

  • கல்வி- விளையாட்டு சார்ந்த பல்கலைக்கழகம்/படிப்புகள் உருவாகும்.

  • ஊடகம்- சர்வதேச விளையாட்டு ஊடக மையமாக சென்னையை உருவாக்க முடியும்.

  • நகர மறுவளர்ச்சி- மான்செஸ்டர் போன்று, புறநகரப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்.

  • விளையாட்டில் உலக அளவிலான அடையாளமாக தமிழகத்தை உருவாக்க முடியும்.

உலகம் கற்றுக்கொடுக்கும் பாடம்

விளையாட்டு நகரம் என்ற கருத்து புதிதல்ல. வெற்றிகரமான விளையாட்டு நகரங்கள் பல நாடுகளிலும் உள்ளன. அவை அனைத்திலும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது.

மான்செஸ்டர்: 2002 காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட மான்செஸ்டர் விளையாட்டு நகரம் இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகங்களில் ஒன்றாக உள்ளது.

400 மீட்டர் தடகள ஓடுதளம், தேசிய ஸ்குவாஷ் மையம், டென்னிஸ் மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அங்கு உருவாக்கப்பட்டன.

இன்று அங்கு ஆண்டுக்கு 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆண்டுக்கு 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒருகாலத்தில் நலிவடைந்திருந்த இப்பகுதி, விளையாட்டு உள்கட்டமைப்பை மையமாகக் கொண்டு மறுமலர்ச்சி பெற்றதாகப் பொருளாதார வல்லுனர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இதுதான் ஒரு சிறந்த விளையாட்டு நகரத்தின் உண்மையான வெற்றிக் கதையாக இருக்கிறது.

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், விளையாட்டு என்பது வெறும் பதக்கங்களைப் பெறும் முயற்சியாக இல்லாமல், பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கு, சுமார் 250 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள அஸ்பயர் ஸோன்-இல் விளையாட்டு அரங்கம், விளையாட்டு மருத்துவம், தங்குமிடம், ஆராய்ச்சி, பயிற்சி உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து உருவான விளையாட்டுக் கட்டமைப்புகள், பின்னர் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கான அடித்தளமாக மாறின. ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளை ஈர்க்க வேண்டும் என்ற பாடத்தை உலகுக்கு உணர்த்தியது தோஹா.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முன்னர் ஸ்போர்ட்ஸ் ஹப் என்றழைக்கப்பட்ட கல்லாங், சுமார் 35 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் வாழ்வியல் மையமாக உள்ளது. 55,000 இருக்கைகள் கொண்ட தேசிய அரங்கம், உள்ளரங்க விளையாட்டு அரங்கம், நீர்விளையாட்டு வசதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இங்கு உள்ளன.

அரசே முழு முதலீட்டையும் செய்யாமல், தனியார் பங்களிப்பையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட, நகரின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்த ஒரு வெற்றிகரமான விளையாட்டு நகர மாடலுக்கு உதாரணமாக உள்ளது.

இந்த நகரங்களில் ஏற்பட்ட பொருளாதார மாறுதல்களை எண்ணிப் பார்த்து தமிழக அரசு விளையாட்டு நகரத் திட்டத்தின் மறுசீரமைப்பைக் கவனமாகத் திட்டமிட வேண்டும்.

-சிறப்பு நிருபர்கள் குழு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments