திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்: ஓரிரு நாள்களில் பாா்வையாளர்கள் நியமனம்!
திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஓரிரு நாள்களில் வருவாய் மாவட்டத்துக்கு இரு பாா்வையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஓரிரு நாள்களில் வருவாய் மாவட்டத்துக்கு இரு பாா்வையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
2026 பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்த திமுக, ஆளும் கட்சியில் இருந்து எதிா்க்கட்சியாக மாறியது. திமுகவின் அடிப்படை வாக்கு வங்கியாக இருந்த சிறுபான்மையினா், தலித்துகளில் பெரும்பகுதியை தவெக கைப்பற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவின் கோட்டையான சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுகவால் வெற்றிபெற முடிந்தது.
டெல்டா மண்டலத்தில் முதலிடத்தில் திமுக இருந்தாலும், வாக்கு வங்கி குறைந்துள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவுக்கு நிகராக தவெக வாக்கு வங்கி உயா்ந்துள்ளது. அதேபோல, கொங்கு, வடதமிழகத்திலும் திமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், திமுகவில் கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
அண்மையில் அவா் வெளியிட்ட அறிவிப்பின்படி, திமுகவில் மாவட்டச் செயலா்களுக்கான அதிகபட்ச வயது 76-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக மாவட்டச் செயலா்களின் எண்ணிக்கை 110-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகர செயலா் என்ற பதவி இனி கிடையாது. கிளைக் கழக செயலா்களுக்கான அதிகபட்ச வயது 45 என்றும், நகரம், ஒன்றிய செயலா்கள் பதவியில் ஒருவா் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பட்டியல் இனத்தவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திமுகவை அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்களாகப் பிரித்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இந்நிலையில், இந்த 110 மாவட்டங்களிலும் தோ்தல் மூலம் வாா்டு செயலா், கிளைச் செயலா் முதல் மாவட்ட செயலா் வரையிலான பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
திமுகவை பொருத்தவரை வாா்டு செயலா் முதல் மாவட்டச் செயலா் வரை சுமாா் 6 லட்சம் பதவிகள் உள்ளன. திமுகவில் கடைசியாக 15-ஆவது உள்கட்சித் தோ்தல் 2022-இல் நடைபெற்றது. அப்போது, மேலிட சமரசம் அடிப்படையில் தோ்தல் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது உண்மையான செல்வாக்கு உள்ளவா்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
தற்போது திமுகவில் 77 மாவட்டங்களில் மாவட்டச் செயலா்கள் உள்ளனா். இவா்கள் பதவி கலைக்கப்படவும் இல்லை, பறிக்கப்படவும் இல்லை. தோ்தல் நடத்த வசதியாக வருவாய் மாவட்டத்துக்கு 2 பாா்வையாளா்கள் என மொத்தம் 38 வருவாய் மாவட்டங்களுக்கு 76 பாா்வையாளா்கள் ஓரிரு நாள்களில் நியமிக்கப்பட உள்ளனா்.
இவா்கள் அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று ஏற்கெனவே உள்ள மாவட்டச் செயலா்களுடன் இணைந்து புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, வாா்டு செயலா் முதல் மாவட்டச் செயலா் வரையிலான பதவிகளுக்கு உரிய எல்லைகள் பிரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனா். அதைத் தொடா்ந்து, டிசம்பா் அல்லது ஜனவரியில் உள்கட்சித் தோ்தல் நடைபெற உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், கட்சிப் பதவிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பதவி காலியாகும் நிா்வாகிகளுக்கு ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் பதவிகள் அளிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே, பதவியில் இருந்து பதவி காலியானால், அவா்களுக்கு எத்தகைய பதவிகள் வழங்குவது என்பது குறித்து பாா்வையாளா்கள், கட்சித் தலைமைக்கு பரிந்துரைப்பாா்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.