முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ
திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ அளித்த பேட்டி.....
பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் விஜய்க்கு துளியும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி, மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
அதில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பதவியை ராஜிநாமா செய்வோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததாக கூறப்படுவது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும் என்றும் வைகோ கூறினார். மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையை தவறிவிட்டதாகவும், கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு வஞ்சகமும் துரோகமும் செய்து வருகிறது. மேக்கேதாட்டு அணை பிரச்னை எழுந்தபோது, கர்நாடக எல்லையில் தான் அறப்போராட்டம் நடத்தினேன்.
மேக்கேதாட்டு திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். ஒருசில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஒட்டுமொத்த அரசின் கருத்தாக கருதப்படக்கூடாது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
பெரியார், அம்பேத்கர் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் ஏதேனும் அரசு ஆவணங்கள் அல்லது திட்டங்களில் இருந்து விடுபட்டிருந்தால், அதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
எந்த காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற நடவடிக்கையை கொண்டு வரக்கூடாது. தொகுதி மறுவரையறை முயற்சியை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
MDMK General Secretary Vaiko stated that Chief Minister Vijay does not have even the slightest desire to become the Prime Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.