கொளத்தூரில் திமுக தலைவருக்குக்கூட மக்கள் பிச்சை போடவில்லை: துரை வைகோ
மக்களவை உறுப்பினர் பதவி திமுக போட்ட பிச்சை என திமுகவினர் கூறியதற்கு மதிமுக எம்.பி. துரை வைகோ எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...
மக்களவை உறுப்பினர் பதவி திமுக போட்ட பிச்சை என திமுகவினர் கூறியதற்கு மதிமுக எம்.பி. துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் துரை வைகோ எம்.பி. பேசியதாவது, "என்னுடைய எம்.பி. பதவி, திமுக போட்ட பிச்சை என்கின்றனர். திமுகவையும், அதில் இருப்பவர்கள் பலரையும் நான் மதிக்கிறேன். கட்சிக்காக உழைத்து, வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தொண்டர்களும் உள்ளனர்.
தேர்தல் வரும்பொழுது, கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு, உழைப்பை வைத்து மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறுகிறோம். இது யாரும் போடுகிற பிச்சை இல்லை. அவர்கள் என்ன மன்னர்களா? சக்கரவர்த்திகளா? இது என்ன அவர்கள் போடும் பிச்சையா?
Advertisement
Advertisement
20 - 30 இயக்கங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து, அதில் திமுக உழைப்பும் பிரதானமானதுதான். அதனை மறுக்கவில்லை. ஆனால், மக்கள் வாக்களித்ததால்தான் எம்.பி.யாக வெற்றி பெற்றோம். இவர்கள் போட்ட பிச்சையால் அல்ல.
அடுத்து வருகிற தேர்தலிலும்கூட பார்ப்போம். தேர்தலில் அவர்களும் நிற்கட்டும். யார் போடுகிற பிச்சை என பார்ப்போம்.
இது மக்கள் போடுகிற பிச்சை. மக்கள்தான் எஜமானர்கள். இவர்கள் போடும் பிச்சை அல்ல. இதெல்லாம் தவறான கருத்து. இதுதான் ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது. இதுதான் பண்ணையார் அரசியல். பண்ணையார் அரசியல் கூடாது என்றுதான், 1967-ல் அண்ணா மாற்றத்தைக் கொண்டுவந்தார். சாதாரண எளியவர்கள்கூட எம்எல்ஏ, எம்.பி.-க்கள் ஆனார்கள்.
ஆனால், அதே பண்ணையார் அரசியல் இன்று திராவிட இயக்கங்களில் வந்துவிட்டது. இப்போதெல்லாம் சாமானியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர் எந்த சாதி, எவ்வளவு முதலீடு போடுவார் என்றுதான் கேட்கின்றனர்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்தான் முதல்வர் விஜய். அவர்தான் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மேலும், லஞ்சம் இல்லாத ஓர் அரசாங்கத்தையும் அவர் கொடுத்து வருகிறார்.
ஆகையால், பிச்சை என்ற வார்த்தையெல்லாம் விட்டுவிடுங்கள். அவர்கள் சொல்கிற மாதிரியே பிச்சை என்று வைத்துக் கொள்வோம். எங்களுக்காவது மக்கள் பிச்சை போட்டார்கள். ஆனால், கொளத்தூரில் திமுக தலைவருக்குக்கூட மக்கள் பிச்சை போடவில்லையே" என்று தெரிவித்தார்.
People did not even offer alms to the DMK Chief MK Stalin in Kolathur, says MDMK MP Durai Vaiko
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.