தோல்வி அடைய வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
தோல்வி அடைய வாழ்த்துகள் என்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
சென்னை: எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரசாரம் செய்யுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கருத்துத் தெரிவித்திருக்கும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!
இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் மு.க. ஸ்டாலின்.
Advertisement
Advertisement
ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டப்பேரவையிலேயே தோலுரித்தேன்.
நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.
விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.
அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த முதல்வரின் ஒரே பங்களிப்பு.
7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
அதனால், இப்படி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள் மு.க. ஸ்டாலின். ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்குப் பிறகே, திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கிறது. எனவே, இந்தப் பதிவில் அதுபற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பற்றி செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியதற்கு பிறகு பதிலளிக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
Edappadi Palaniswami has congratulated DMK leader and Chief Minister Stalin on his defeat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.