அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகியது பற்றி...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், நாளை தவெகவில் இணையவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இவர்களுடன் அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது என்னுடைய வாழ்வில் நான் கண்ட எல்லா விதமான ஏற்றத்திற்கும் காரணமாக இருந்த இயக்கம். திருப்பூரில் எனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த இயக்கம். அதிமுக எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதா.
எளிய தொண்டனாக 1980-ம் ஆண்டில் கட்சியில் இணைந்த எனக்கு கிளை செயலாளர், மாவட்ட பனியன் சங்க செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர், நகர செயலாளர், மாவட்ட செயலாளர் என கட்சியில் அனைத்து உயரிய பொறுப்புகளையும்,
2011 ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அதனை தொடர்ந்து அமைச்சராகவும் உயரிய பதவிகளை தந்து ஜெயலலிதா அழகு பார்த்தார்.
2016-ல் எனக்கு ஜெயலலிதா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத போதும் மாவட்ட செயலாளராக 4 தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடுபட்ட காரணத்தினால் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார்.
2016 தேர்தலுக்கு பின்பு 22 மாவட்ட செயலாளர்களை ஜெயலலிதா மாற்றிய போதும் என்னை மாற்றாததே அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எடுத்துகாட்டாக இருந்ததை சுட்டி காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலாளராக தலைமை அறிவுறுத்திய பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன்.
2020 ல் எந்த காரணமுமின்றி எனது மாவட்ட செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்ட போதும் தலைமைக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தேன்.
2021 தேர்தலில் பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு கட்சியினரின் மேலான உழைப்பால் வெற்றி அடைந்தேன்.
தொடர்ந்து திருப்பூர் மாநகரில் கட்சி பலமிழந்து வருவதை பல முறை தலைமையிடம் சுட்டிக் காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையே இருந்தது.
2026 தேர்தலில் போட்டியிட்ட போது தான், திருப்பூரில் கட்சியின் உண்மை நிலை தெரிய வந்தது.
தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் தோல்வி அடைந்த எங்களை போன்ற வேட்பாளர்களுக்கு தலைமை எந்த விதமான ஆறுதல் வார்த்தைகளோ, ஊக்கத்தையோ தரவில்லை.
கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது அதனை தடுக்க தலைமையும் விரும்புவதில்லை.
என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில் தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும். ஆனால் இன்றோ தலைமையே இயக்கத்தை பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.
எதிர்கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநல கூட்டம் இயங்கி கொண்டிருக்கின்றது.
நான் என்றும் அதிமுகவை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால் தேனுடன் ஒரு துளி விஷத்தை சேர்த்தாலும் விஷம் தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.
தண்டனைகளை தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார் தான் கருணையையும், மன்னிப்பை தருவார்கள்??
தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தை தந்தவர் ஜெயலலிதா.
இன்று அனைத்து கட்சிகளும் அதிமுகவினரை அரவணைக்க தயாராக இருக்கும் போது அதிமுகவின் தலைமை நீக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது.
நீண்ட யோசனைக்கு பிறகு அதிமுக எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன்.
இது வரை எனக்கு ஆதரவளித்து வந்த கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
ஜெயலலிதா மறைந்தது முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தன், தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த நிலையில், சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில், எம்.எஸ்.எம். ஆனந்தும் தவெகவில் இணையவுள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Former Minister M.S.M. Anandan quits AIADMK! Is he joining TVK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.