முகப்பு
தமிழ்நாடு

கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி! நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி? குப்பை வண்டி வருமா?

கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி இருப்பதாகவும், முடிந்த பணிகளுக்கான நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி எனத் தகவல்.

Updated On : 9 ஜூலை 2026, 4:02 pm IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியால், ஒப்பந்தம் விடப்பட்டு மேற்கொண்டு முடிக்கப்பட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையே ரூ.2,000 கோடி என்றும், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாக சென்னை மாநகராட்சி செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவாயை பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சொத்து வரி வசூலிப்பு நடைமுறைகளை துரிதப்படுத்தியிருக்கிறது.

இதுவரை சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த பணிகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகையே பணம் இல்லாமல் நிலுவையில் இருக்கிறது. இது ரூ.2,000 கோடி. இதில், திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்றான 'உர்பாசர் சுமீத்' (Urbaser Sumeet) நிறுவனத்திற்குச் சுமார் ரூ.450 கோடி நிலுவைத் தொகையும் அடங்கும்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சியின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசின் சிறப்பு நிதியின்கீழ் நிதி ஒதுக்கீட்டை வெளியிடுவது குறித்துப் பரிசீலிக்குமாறு முதல்வர் ஜோசப் விஜய்க்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் கோரிக்கை விடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சொத்து வரி மற்றும் நிலுவை வரிகளை வசூலிக்கவும், ஏற்கனவே குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும் சொத்துகளின் மதிப்பை மறுமதிப்பீடு செய்து விரைவில் உரிய வரி விதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் முடியாமல் நிதி நெருக்கடியின் அழுத்தம் பாதிக்கத் தொடங்கியிருப்பதாகவும், சென்னை மாநகராட்சி, நாள்தோறும் சொத்து வரி வசூல் தொகை இலக்கை ரூ.5 கோடியிலிரந்து ரூ.10 கோடியாக உயர்த்தியிருக்கிறது. சென்னை மாநகராட்சியின் அரையாண்டு நிதித் தேவை ரூ.980 கோடி என்ற நிலையில், ஜூலை 1ஆம் தேதி வரை ரூ.500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

சொத்து வரி வசூல் பணிகளுக்காக, ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வைக்கப்படுகிறார்கள். அதிக மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்றும் சொத்து வரி வசூலிக்கப்படுகிறதாம்.

விரைவில் இந்த நிதி நெருக்கடி சரி செய்யப்பட்டதும், சென்னை மாநகராட்சி மூலம் அடுத்த மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும், இது செப்டம்பர் மாதத்துக்குள் சரி செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களுக்கும் மாத ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதே முக்கிய கடமையாகக் கொண்டு செயல்படுவதாகவும, புதிய மேம்பாட்டு மற்றும் கட்டமைப்புப் பணிகளுக்கு செலவிடுவது நிறுத்தி வைக்கப்படுவது அல்லது தாமதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சென்னை மாநகராட்சியின் பள்ளிக் கட்டடங்களை சீரமைப்பது, மழைநீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்துவது, சாலை மேம்பாடு உள்ளிட்டப் பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு உலக வங்கிகளிடமிருந்து இதுவரை ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் பெற்று, அதற்காக வட்டி செலுத்தி வருகிறது.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு, தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில்தான், திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களையும் தவெக அரசு ரத்து செய்து வருகிறது. இதில், வேளச்சேரி மேம்பாலப் பணிகள், சாலை போடும் பணி உள்ளிட்டவையும் அடங்கும்.

ஏற்கனவே செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால் புதிய பணிகளைத் தொடங்க வேண்டாம் என்றும் பள்ளி மாணவர்களுக்கான தனிப்பாதை, சாலை வளைவுகளை சீரமைப்பது, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை போன்ற பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

summary

Chennai Corporation faces severe financial crisis! Arrears alone total ₹2,000 crore? Will the garbage truck arrive?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments