முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 9 ஜூலை 2026, 8:08 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல... அரசியலின் மேடை அல்ல... அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும்! ​இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.

Advertisement

Advertisement

அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை. ​மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.

அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம். ​எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. ​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.

புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும். ​எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!

அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்! ​அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்” என்றும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கடந்த ஜூலை 3 ஆம் தேதி, சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கினார். 'ஆங்கிலத்தில் ஒரு எளிய கேள்விக்குக்கூட பதில் அளிக்கத் தெரியவில்லை' என்று கூறி ஆங்கில வகுப்பு பாடங்களை மேம்படுத்துமாறு தெரிவித்தார். 'இதுவே இப்படி என்றால் கடைசி வரிசை மாணவர்கள் எப்படி இருப்பார்கள்?' என்ற கோணத்திலும் பேசியிருந்தார்.

இந்தச் சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக அமைச்சர் நடந்துகொண்டதாக எதிர்ப்புகளும் வலுத்திருந்தன.

summary

School Education Minister Rajmohan has stated that no unauthorized persons are permitted to enter school premises unnecessarily.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments