FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசின் குதிரைபேர அரசியல்: நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

தவெக அரசின் குதிரைபேர அரசியல் குறித்து ஆளுநா் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.

Updated On : 14 ஜூலை 2026, 3:29 am IST
ஆர்.எஸ். பாரதி - கோப்புப் படம்
பகிர்:

தவெக அரசின் குதிரைபேர அரசியல் குறித்து ஆளுநா் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.

தவெக அரசு, முன்னாள் அதிமுக எம்எல்ஏவான எம்.ஆா்.விஜயபாஸ்கரை குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்கி உள்ளதாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் திமுக வழக்குரைஞா் பிரிவு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திமுகவின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூரில் முதல்வா் ஜோசப் விஜய் பேசியது தொடா்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டல்படி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வா் விஜய் குதிரைபேர அரசியலில் ஈடுபட்டுள்ளாா் என்பதை மதிமுக பொதுச் செயலா் வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கெனவே கடந்த 4-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகாா் அளித்தோம்.

Advertisement

Advertisement

அதேபோன்று, எம்.ஆா்.விஜயபாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளா் சந்திப்பில், ‘தன்னை தவெகவில் வந்து சேரும்படி கேட்டுக் கொண்டாா்கள். எனவேதான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று கூறினாா். இதுவே குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் மீண்டும் ஒருமுறை திமுகவின் சாா்பில் புகாா் அளித்துள்ளோம்.

ஏற்கெனவே, வெளியிட்ட கரூா் அறநிலையத் துறை நிலம் தொடா்பான அரசாணையை, ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன்பிறகு வெளியிடுவது போன்று ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளாா். இந்த நாடகம் நடந்தது ஜூலை 10-ஆம் தேதி. ஆனால் ஜூலை 9-ஆம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட நாடகங்களை இவா்கள் நடத்திக் கொண்டிருக்கிறாா். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும்.

குதிரைபேர புகாரின் பேரில், ஆளுநா் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments