FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குறைந்த செலவில் புற்றுநோய்க்கான நவீன மரபணு சோதனை! விருது பெற்ற இளம் விஞ்ஞானி தகவல்!

இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற திருச்சி மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் கூறியது பற்றி...

Updated On : 17 ஜூலை 2026, 1:54 pm IST
இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் - DIN
பகிர்:

புற்றுநோய்க்கான நவீன மரபணு பரிசோதனைகளை குறைந்த விலையில் சாதாரண மக்களுக்கும் வழங்கும் இலக்குடன் ஆய்வு செய்வதாக இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் தெரிவித்தார்.

இந்திய நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் வல்லுநர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவின் 3 நாள்கள் ஆண்டு மாநாடு (TAPCON 2026) புதுச்சேரி கணபதிச்செட்டிக்குளத்தில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (PIMS) வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இளம் விஞ்ஞானிக்கான விருது, மருத்துவர் மது பாலாஜிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த டாக்டர் மது பாலாஜி சிவக்குமார் (38), மூலக்கூறு நோயியல் (Molecular Pathology) நிபுணர், மோல்பாத் பிரைவேட் லிமிடெட் (Molpath Private Limited) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் 'டாக்டர்ஸ் ஜீன்பாத்' (DDC Genepath) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

Advertisement

Advertisement

புற்றுநோய் ஆராய்ச்சி, மரபணு மருத்துவம் (Precision Medicine) மற்றும் மலிவு விலை மருத்துவ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்காக, இந்திய நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் (IAPM) சார்பில் வழங்கப்படும் "இளம் விஞ்ஞானி விருது – 2026" அவருக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் மது பாலாஜி, கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் துல்லியமான மரபணு மருத்துவத்தை இந்தியாவில் அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவர் உருவாக்கி வரும் 'ஆர்கனோசிப்' (OrganoChip) என்ற புதிய கருவி, நோயாளியின் புற்றுநோய் செல்களைப் பயன்படுத்தி எந்த மருந்து அவருக்கு சிறப்பாக செயல்படும் என்பதை சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே கண்டறிய உதவும். இதன் மூலம் தேவையற்ற மருந்துகளைத் தவிர்த்து, நோயாளிக்கு ஏற்ற சிகிச்சையைத் தேர்வு செய்ய முடியும்.

இந்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT-BIRAC) சார்பில் ரூ. 50 லட்சம் உயிரித்தொழில்நுட்பத் தொடக்க மானியம் (BIG) வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், டாக்டர் மது பாலாஜி தலைமையிலான ஆராய்ச்சி குழு, மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ. 3.8 கோடிக்கும் அதிகமான போட்டி அடிப்படையிலான ஆராய்ச்சி நிதியைப் பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' (StartupTN -TANSEED) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, ஐஐடி மெட்ராஸ் தலைமையில் நடைபெறும் ரூ. 3.2 கோடி மதிப்பிலான ஐசிஎம்ஆர் ஆராய்ச்சித் திட்டத்தில் இணை முதன்மை ஆய்வாளராக (Co-Principal Investigator) செயல்பட்டு வருகிறார். இந்த திட்டத்தின் மூலம், வெறும் ரத்த மாதிரியைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய பரிசோதனை உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது பல முக்கிய மரபணு பரிசோதனைகள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதால், அவற்றின் விலை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை உள்ளது.

இந்த செலவை ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை குறைத்து, உலகத் தரத்திலான துல்லியத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் மாற்றுவதே தனது நீண்டகால இலக்கு என டாக்டர் மது பாலாஜி தெரிவித்தார்.

விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கரு முட்டையைப் பொருத்தி குழந்தையைப் பெற்றெடுக்க வழி செய்யும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் ஆரம்ப நிலையிலேயே கரு முட்டையைச் சோதித்து பிரச்னைக்கு உரிய குழந்தைகள் பிறப்பதைத் தடுத்து விடுகின்றன. மேலும், பொதுவாக ஸ்கேனில் ஒரு மகப்பேறு மருத்துவர் சந்தேகம் அடைந்தால் ஒரு தாயின் கர்ப்பத்தில் உள்ள கருவின் திசுவை எடுத்து சோதனை செய்யலாம். மூலக்கூறு நோயியல் மருத்துவர் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அந்த மருத்துவர் சட்டப்பூர்வமாக 24 வாரத்துக்குள் குறிப்பிட்ட தாய்க்குக் கருச் சிதைவு செய்ய முடியும். பெரும்பாலும் குழந்தைக்குத் தந்தை, தாயின் மரபணு கடத்தப்படுவதால்தான் பிரச்னைக்குரிய குழந்தைகள் பிறக்கின்றன.

மேலும், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி விட்டு தற்போது பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். முக்கியமாக சென்னை ஐஐடியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நிதியுதவியுடன் ரூ. 3 கோடியிலான ஓர் ஆராய்ச்சியை எங்கள் குழு நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறைவடைந்த பிறகு மிகக் குறைந்த செலவில் மரபணு சோதனை செய்யும் கருவியைக் கண்டுபிடிக்க உள்ளோம். இப்போது ரூ. 1.5 லட்சம் செலவாகும் இந்தச் சோதனையை ரூ. 5 ஆயிரம் அல்லது ரூ. 10 ஆயிரத்தில் செய்ய முடியும். இதைத் தவிர இப்போது திருச்சி என்.ஐ.டி.யில் செய்யறிவு கேந்திரம் இருக்கிறது. அங்கு செய்யறிவு தொழில்நுட்ப உதவியுடன் மரபணு தொடர்பான சோதனைகள் செய்துள்ளோம். இந்த நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி உள்பட நாட்டின் அதி முக்கியமான 7 நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ய ரூ. 6 கோடிக்கான திட்டத்தையும் மத்திய அரசிடம் புதன்கிழமை இரவு (ஜூலை 16) அளித்துள்ளோம்.

மரபணு மருத்துவம், புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதன் அதிக செலவு காரணமாக பல நோயாளிகளால் இதைப் பெற முடியவில்லை. உலகத் தரத்திலான மரபணு பரிசோதனைகளை குறைந்த செலவில் இந்திய மக்களுக்கு வழங்குவதே எங்கள் கனவு. பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு நோயாளிக்கும் துல்லியமான மருத்துவமும், நவீன சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த இளம் விஞ்ஞானி விருது, மேலும் பல சமூகப் பயனுள்ள ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எனக்கு மிகுந்த ஊக்கமாக உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களைக் காட்டிலும் பக்க விளைவு மாத்திரைகளால் இறப்பவர்கள்தான் அதிகம். அதனால் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன மாத்திரை, எந்த அளவுக்கு மாத்திரை வழங்க வேண்டும்? என்ற பங்களிப்புக்காகத்தான் எனக்கு இப்போது விருது வழங்கப்பட்டுள்ளது என்றார் மது பாலாஜி சிவக்குமார்.

summary

Low cost genetic testing for cancer: Award-winning young scientist

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments