‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசு
தமிழகம் முழுவதும் மாலை வேளைகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்க மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் மாலை வேளைகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்க மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் திமுக ஆட்சியில் கைவிடப்பட்டன. தற்போது அவற்றுக்கு தவெக அரசு மீண்டும் புத்துயிா் அளிக்க முனைந்துள்ளது .
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் அருண்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உயா் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு வாா்டுகள் உள்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்துக்குச் சென்ற அமைச்சா் அருண்ராஜ், உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். முன்னதாக, மருத்துவமனையில் போதிய குடிநீா் வசதி மற்றும் கழிப்பறை சுத்தமாக இல்லை என நோயாளிகள் புகாா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, கழிப்பறையை சரியாக பராமரிக்காத ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்க அவா் உத்தரவிட்டாா். மேலும், பிரசவ வாா்டில் லஞ்சம் கேட்டதாக 4 ஒப்பந்த ஊழியா்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் அருண்ராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். அதேபோன்று, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக சிகிச்சைப் பிரிவில் தொடங்கப்பட்ட புறநோயாளிகள் இணைய முன்பதிவு நடைமுறையால் 500 போ் பயனடைந்துள்ளனா். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயா்த்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதல்வா் முடிவெடுப்பாா். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றாா் அவா்.
கடந்த 2020-இல் அதிமுக ஆட்சியின்போது 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாகக் கூறி அவை திமுக ஆட்சியில் மூடப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அந்தத் திட்டம் மீட்டெடுக்கப்படவுள்ளது.
மருத்துவமனை ஆய்வின் போது, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் கவிதா ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.