நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தீயணைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீயணைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு...
தீயணைப்பு நிலைய அதிகாரி பதவி உயா்வு கோரிய விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீயணைப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் ஆா்.முருகேசன், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் கே.செல்வம் ஆகியோா்
சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீயணைப்பு நிலைய அதிகாரி பதவி உயா்வு கோரி வழக்குத் தொடா்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தீயணைப்பு நிலை அதிகாரி பதவி உயா்வுக்கு கடந்த 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய ஆண்டுகளின் அடிப்படையில் தகுதியானவா்களின் பணிமூப்புப் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட்டது. ஆனால், அதுபோன்ற பட்டியல் தயாரிக்கப்படவில்லை. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை அவமதித்த, உள்துறை முதன்மைச் செயலா் கே.மணிவாசன், தீயணைப்புத் துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது அரசுத் தரப்பில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறி அதுதொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, உயா்நீதிமன்றம் கடந்த 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியாக என மொத்தம் 3 பணிமூப்பு பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டது. ஆனால், அரசுத் தரப்பில் 2018-2019-ஆம் ஆண்டுக்கு மட்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடா்பாக தீயணைப்புத் துறை இயக்குநா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Contempt of Court Case: Fire Services Director Ordered to Respond
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.